டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாதமும் $45 மில்லியன் வழங்க இருக்கும் எலான் மஸ்க்
டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாதமும் $45 மில்லியன் டாலர்களை எலான் மஸ்க் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெக் பில்லியனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்பின் பிரச்சாரசத்தை ஆதரிக்கும் புதிய நிதிக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் $45 மில்லியன் செலுத்த திட்டமிட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் திங்களன்று தெரிவித்துள்ளது. மஸ்கின் நன்கொடைகள் அமெரிக்கா பிஏசி என அழைக்கப்படும் ஒரு அரசியல் குழுவிற்குச் செல்லும். அவரை தவிர, பலன்டிர் இணை நிறுவனர் ஜோ லான்ஸ்டேல், கனடாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் கெல்லி கிராஃப்ட் மற்றும் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களான டைலர் மற்றும் கேமரூன் விங்க்லெவோஸ் ஆகியோரும் அமெரிக்கா பிஏசிக்கு பெரும் நன்கொடைகளை வழங்கி டிரம்பை ஆதரித்து வருகின்றனர்.
"அதிபர் டிரம்ப்பை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்": எலான் மஸ்க்
கடந்த சனிக்கிழமை பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பேரணியில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயற்சி நடந்ததை அடுத்து, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், டிரம்புக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். "அதிபர் டிரம்ப்பை நான் முழுமையாக ஆதரிக்கிறேன், அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்" என்று மஸ்க் ட்விட்டரில் கூறியிருந்தார். $250 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட உலகின் மிகப் பெரிய செல்வந்தரான மஸ்க், 2024 அமெரிக்கத் தேர்தலின் போது டிரம்புடன் அதிக நட்பை வளர்த்துக் கொண்டார். கடந்தஹ் மார்ச் மாதம், பில்லியனர் நெல்சன் பெல்ட்ஸின் புளோரிடா இல்லத்தில் வைத்து காலை உணவின் போது இருவரும் நேரில் சந்தித்தனர்.