Page Loader
பணத்தை இழந்ததற்காக கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்
180 பில்லியன் டாலர்களை இழந்து கின்னஸ் சாதனை படைத்த எலோன் மஸ்க்

பணத்தை இழந்ததற்காக கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்

எழுதியவர் Sindhuja SM
Jan 11, 2023
12:26 pm

செய்தி முன்னோட்டம்

எலான் மஸ்க் அதிகமாக பணத்தை இழந்ததற்காக புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நவம்பர் 2021 முதல் எலான் மஸ்க் சுமார் 180 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக கின்னஸ் உலக சாதனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கின்னஸ் உலக சாதனையின் படி, 2000ஆம் ஆண்டில் ஜப்பானிய தொழில்நுட்ப முதலீட்டாளர் மசயோஷி சன், $58.6 பில்லியன் டாலர்களை இழந்து, உலகத்தில் அதிக பணத்தை இழந்தவர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். அந்த சாதனையை தற்போது எலான் மஸ்க் முறியடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, டெஸ்லா பங்குகளின் வீழ்ச்சியின் காரணமாக 2021ஆம் ஆண்டில் 320 பில்லியன் டாலர்களாக இருந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஜனவரி 2023 இல் 138 பில்லியன் டாலராகக் குறைந்ததுள்ளது.

டெஸ்லா

ட்விட்டரால் வீழ்ச்சி அடைந்த டெஸ்லா பங்குகள்

மேலும், இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மஸ்க், தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் தற்போது முதலிடத்தில் இருக்கிறார். இவர் 'லூயி உய்ட்டன் மொயட் ஹென்னெஸி' என்ற ஆடம்பர பொருட்களை விற்கும் நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். மஸ்க் வரலாற்றிலேயே அதிகமான பணத்தை இழந்தவராக இருந்தாலும், அவர் இன்னும் உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மஸ்க் ட்விட்டரை வாங்கியது மற்றும் அதன் நிர்வாகம் தொடர்புடைய கவனச்சிதறல்கள் காரணமாக கடந்த 3மாதங்களாக டெஸ்லாவின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன. டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 2022இல் 65% நஷ்டமடைந்தது. ஆனால், டெஸ்லா ஒரு மதிப்புமிக்க கார் நிறுவனமாகும். அதனால், இதன் பங்குகள் வரும் ஆண்டில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.