ஈபிள் கோபுரத்தில் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்: இந்து அமைப்பின் வருகையின் போது பெண் ஊழியர்கள் ஒதுக்கப்பட்டதாக சர்ச்சை
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம், திங்கள்கிழமை அன்று ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தம் காரணமாக முற்றிலும் மூடப்பட்டது. இந்து அமைப்பை சேர்ந்த தூதுக்குழுவினர் மேற்கொண்ட தனியார் பயணத்தின் போது, பெண் ஊழியர்கள் பணியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறி ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா(BAPS) என்ற அமைப்பின் சார்பில் சுமார் 100 பேர் கொண்ட குழுவினர் ஈபிள் கோபுரத்திற்கு வருகை தந்தனர். அப்போது, பெண் ஊழியர்கள் தங்கள் பணிப் பொறுப்புகளிலிருந்து விலக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ஆண்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், குறிப்பிட்ட பகுதிகளைப் பெண்கள் கடக்கத் தடை விதிக்கப்பட்டதாகவும் 'CGT' தொழிலாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. நிர்வாகத்தின் இந்த உத்தரவு பெண் ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
நிர்வாகம் மற்றும் BAPS அமைப்பின் விளக்கம்
ஈபிள் கோபுரத்தை நிர்வகிக்கும் 'SETE' நிறுவனம், தூதுக்குழுவினர் பெண்களுடனான தொடர்பைக் குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்ததை உறுதிசெய்துள்ளது.
ஆனால், இத்தகைய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என்றும், இது பாலின சமத்துவக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் ஒப்புக்கொண்ட நிர்வாகம், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் BAPS அமைப்பு, யாருக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை என்றும், எவருக்கேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் அதற்குத் தங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
கொந்தளிப்பு
பிரான்ஸ் அரசியல் தலைவர்களின் கொந்தளிப்பு
இச்சம்பவத்திற்குப் பாரிஸ் மேயர் இம்மானுவேல் கிரகோர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தீவிர வலதுசாரித் தலைவரான மரின் லீ பென், "பிரான்ஸில் பெண்களின் இருப்பைக் கட்டுப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் கேப்ரியல் அட்டால் மற்றும் சமத்துவத்துறை அமைச்சர் அரோர பெர்கே ஆகியோரும், மத அமைப்புகளோ கலாச்சார விதிகளோ பிரெஞ்சு குடியரசின் சட்டங்களுக்கும் பெண்களின் சமத்துவத்திற்கும் மேலானவை அல்ல என வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து திங்கள்கிழமை மூடப்பட்ட ஈபிள் கோபுரம், செவ்வாய்க்கிழமை முதல் வழக்கம்போல மீண்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.