அமெரிக்க டாலரில் ட்ரம்ப் கையெழுத்து: 165 கால பாரம்பரியத்தை உடைக்கும் டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அந்நாட்டின் புதிய பணத்தாள்களில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கையெழுத்து இடம்பெறும் என அமெரிக்கக் கருவூலத் துறை வியாழக்கிழமை அறிவித்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருக்கும் ஒரு அதிபரின் கையெழுத்து பணத்தாளில் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும். இந்த அறிவிப்பின் மூலம், 1861-ஆம் ஆண்டு முதல் கடந்த 165 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த ஒரு முக்கியப் பாரம்பரியம் முடிவுக்கு வருகிறது. இதுவரை அமெரிக்கப் பணத்தாள்களில் 'அமெரிக்கக் கருவூலப் பொருளாளர்' கையெழுத்து இடம்பெறுவது வழக்கமாக இருந்தது. இனி அந்த இடத்திற்குப் பதிலாக அதிபர் ட்ரம்பின் கையெழுத்து இடம்பெறும்.
விவரங்கள்
முக்கிய விவரங்கள்
முதற்கட்டமாக ஜூன் மாதம் முதல் ட்ரம்பின் கையெழுத்து மற்றும் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கையெழுத்துடன் கூடிய 100 டாலர் நோட்டுகள் அச்சிடப்படும். மற்ற பணத்தாள்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகும். "நாட்டின் வரலாற்றுச் சாதனைகளையும், அதிபர் ட்ரம்பின் பங்களிப்பையும் கௌரவிக்க இதைவிடச் சிறந்த வழி ஏதுமில்லை" என ஸ்காட் பெசென்ட் பாராட்டியுள்ளார். முன்னதாக, சுதந்திர தின விழாவையொட்டி, ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட 24 காரட் தங்க நினைவு நாணயத்தை வெளியிடவும் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இந்தப் புதிய 'வரலாற்றுச் சிறப்புமிக்க' நோட்டுகள் வரும் ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்கச் சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.