டிரம்ப்பின் பதவி நீக்கத்திற்கு குவியும் ஆதரவு; அமெரிக்காவில் நடத்தப்பட்ட அதிரடி கருத்துக்கணிப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்க அந்நாட்டு அரசியலமைப்பின் 25-வது திருத்தத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அவருக்கு எதிராக 'பதவி நீக்கத் தீர்மானம்' (Impeachment) கொண்டு வரப் பெரும்பான்மையான வாக்காளர்கள் ஆதரவு தெரிவிப்பதாக புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. லேக் ரிசர்ச் பார்ட்னர்ஸ் அமைப்பு நடத்திய இந்த ஆய்வு, அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. FSFP அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த தேசிய அளவிலான ஆய்வில், 52 சதவீத வாக்காளர்கள் ட்ரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 40 சதவீதம் பேர் மட்டுமே இதனை எதிர்த்துள்ளனர். குறிப்பாக, 46 சதவீதத்தினர் ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளனர்.
எதிர்ப்பு
ட்ரம்ப்பின் செயல்பாடுகளுக்குக் கடும் எதிர்ப்பு
அதிபர் ட்ரம்ப்பின் பணித்திறன் குறித்த அதிருப்தி நிலையும் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த வாக்காளர்களில் 57 சதவீதத்தினர் அவரது செயல்பாடுகளை அங்கீகரிக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணமாக, ஈரான் மீதான போர் மிரட்டல்கள் மற்றும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் அவர் கடைப்பிடிக்கும் கடுமையான போக்குகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. மேலும், அமெரிக்கக் குடியேற்றத் துறை (ICE) மற்றும் மத்திய சட்ட அமலாக்கப் பிரிவினரை அரசியல் எதிரிகளைப் பழிவாங்க ட்ரம்ப் பயன்படுத்துவதாகவும், இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நடைமுறை
பதவி நீக்க தீர்மானம் நடைமுறை என்ன?
அமெரிக்க அரசியலமைப்பின்படி, ஒரு அதிபர் மீது தேசத்துரோகம், லஞ்ச ஊழல் அல்லது இதர குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்படலாம். பிரதிநிதிகள் சபை: முதலில் இங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால் அதிபர் 'Impeached' செய்யப்பட்டவராகக் கருதப்படுவார். ஆனால், அவர் பதவியில் நீடிப்பார். செனட் சபை விசாரணை: அடுத்தகட்டமாக செனட் சபையில் விசாரணை நடைபெறும். அங்கு மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதிபர் பதவியிலிருந்து நீக்கப்படுவார். அதன் பிறகு துணை அதிபர் பொறுப்பேற்பார்.
வரலாறு
அமெரிக்க வரலாற்றில் பதவி நீக்க பின்னணி
அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஆண்ட்ரூ ஜான்சன் (1868), பில் கிளிண்டன் (1998) மற்றும் டொனால்ட் ட்ரம்ப் (2019 மற்றும் 2021) ஆகிய மூவர் மட்டுமே பதவி நீக்கத் தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளனர். இதில் ட்ரம்ப் ஏற்கனவே இருமுறை இத்தகைய தீர்மானங்களை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1974-இல் ரிச்சர்ட் நிக்சன் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்பது உறுதியான நிலையில், அவராகவே முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது 2026 தேர்தலை முன்னிறுத்தி நடத்தப்பட்டுள்ள இந்தக் கருத்துக்கணிப்பு, ட்ரம்ப்பிற்கு எதிராக அதிகரித்து வரும் மக்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறது.