'மாலத்தீவுகள் வேண்டாம், இந்திய கடற்கரைகளுக்கு செல்லுங்கள்': தனது குடிமக்களிடம் அறிவுறுத்தியது இஸ்ரேல்
அழகிய கடற்கரைகளுக்குப் புகழ்பெற்ற மாலத்தீவுகள், காசாவில் நடந்துவரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. மாலத்தீவின் இந்த தடைக்கு பதிலளித்த இஸ்ரேல், மாலத்தீவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாலத்தீவில் ஏற்கனவே உள்ளவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதை பரிசீலிக்குமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த பதட்டங்களுக்கு மத்தியில், கோவா முதல் கேரளா வரையிலான இந்திய கடற்கரைகளின் அழகிய புகைப்படங்களையும் இஸ்ரேலிய தூதரகம் பகிர்ந்துள்ளது. மாலத்தீவை விட்டு வெளியேறி, இந்தியாவில் உள்ள கடற்கரைகளுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் தனது குடிமக்களிடம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலியர்களுக்கான தடை மாலத்தீவுக்கு பெரும் இழப்பை தரும்
"மாலத்தீவுகள் இனி இஸ்ரேலியர்களை வரவேற்கவில்லை என்பதால், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்று, மிகுந்த விருந்தோம்பலுடன் நடத்தும் சில அழகான மற்றும் அற்புதமான இந்திய கடற்கரைகளுக்கு வாருங்கள்" என்று இஸ்ரேல் தூதரகம் இன்று ட்வீட் செய்துள்ளது. இஸ்ரேல் பகிர்ந்த புகைப்படங்களில் லட்சத்தீவுகளின் புகைப்படங்களும் அடங்கும். ஏற்கனேவே, லட்சத்தீவினால் மாலத்தீவு மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவுகள் சேதம் அடைந்துள்ள நிலையில், இந்த பிரச்சனை எழுந்துள்ளது. மாலத்தீவுகள் சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ளன. எனவே இந்த இஸ்ரேலிய தடை மாலத்தீவுக்கு பெரும் இழப்பை தரும். ஏற்கனேவே, இந்தியாவுடனான மாலத்தீவின் பிரச்சனைகளால் இந்திய சுற்றுலா பயணிகள் மாலத்தீவுக்கு செல்வது குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.