திடீரென்று பதவி விலகுவதாக அறிவித்தார் டென்மார்க் ராணி
ஐரோப்பாவின் நீண்ட கால அரசாட்சி என்று பெயர் பெற்ற டென்மார்க்கின் ராணி மார்கிரேத் II, 52 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 14 ஆம் தேதி அரியணையில் இருந்து விலக உள்ளார். இது குறித்த அறிவிப்பை அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். அவருக்கு அடுத்தபடியாக அவரது மூத்த மகன் பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக்-கு பட்டம் சூட்டப்பட உள்ளது. 1972இல் அரியணை ஏறிய 83 வயதான ராணி மார்கிரேத் II, தனது பாரம்பரிய புத்தாண்டு உரையின் போது நேரடி தொலைக்காட்சியில் திடீரென்று தான் பதவி விலக போவதாக அறிவித்தார். டென்மார்க்கில் உள்ள 5.9 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். அதில் பலர் ராணியின் பாரம்பரிய புத்தாண்டு உரையாற்றும் நிகழ்ச்சியை பார்க்கும் வழக்கம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியணையை பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக் ஏற்றுக்கொள்வர்
இந்நிலையில், அந்த நிகழ்ச்சில் உரையாற்றும் போது, கடந்த பிப்ரவரியில் அவர் மேற்கொண்ட வெற்றிகரமான முதுகு அறுவை சிகிச்சை பற்றிக் குறிப்பிட்டு பேசிய ராணி மார்கிரேத் II, "அறுவைசிகிச்சை இயற்கையாகவே எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டியது - அடுத்த தலைமுறைக்கு பொறுப்பை விட்டுச்செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்று யோசித்தேன்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "இதுதான் சரியான நேரம் என்று நான் முடிவு செய்துள்ளேன். என் அன்புக்குரிய தந்தைக்குப் பின், நான் பதவியேற்ற 52 ஆண்டுகளுக்குப் பிறகு - 14 ஜனவரி 2024 அன்று - நான் டென்மார்க் ராணி பதவியில் இருந்து விலகுவேன். நான் அரியணையை என் மகன் பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக்கிடம் விட்டுவிடுகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.