பிலிப்பைன்ஸ் கப்பலில் தீ விபத்து: ஒரு குழந்தை உட்பட 31 பேர் பலி
தெற்கு பிலிப்பைன்ஸ் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 1 குழந்தை உட்பட 31 பேர் உயிரிழந்தனர் என்றும் 230 பேர் மீட்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லேடி மேரி ஜாய் 3 என்ற கப்பல், மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரத்திலிருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. தீயில் இருந்து தப்பிக்க பலர் கடலுக்குள் குதித்தனர். பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் அடங்கிய மீட்புப் படையினர் 195 பயணிகளையும் 35 பணியாளர்களையும் காப்பாற்றினர். காணாமல் போன ஏழு பயணிகளைத் தேடும் மீட்புப் பணி வியாழக்கிழமை வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது..
படகுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 18 உடல்கள்
எரிந்த கப்பல் பசிலனின் கரையோரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு, கடலோர காவல்படை பணியாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள், பயணிகள் கேபினின் பட்ஜெட் பிரிவில் இருந்து மேலும் 18 உடல்களைக் கண்டுபிடித்தனர். குறைந்தது 23 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடிக்கடி ஏற்படும் புயல்கள், மோசமாக பராமரிக்கப்படும் படகுகள், நெரிசல் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை கவனக்குறைவாக செயல்படுத்துதல், போன்ற காரணங்களால் பிலிப்பைன்ஸ் தீவுகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும். டிசம்பர் 1987 இல், டோனா பாஸ் என்ற படகு எரிபொருள் டேங்கருடன் மோதியதால் மூழ்கியது. உலகின் மிக மோசமான இந்த பேரழிவில் 4,300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.