மீண்டும் பலூச் போராளிகள் தாக்குதல்; தற்கொலை குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஐந்து பேர் பலி
செய்தி முன்னோட்டம்
பலுசிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஐந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஈரானிய எல்லைக்கு அருகே தஃப்தான் நோக்கிச் சென்ற பாகிஸ்தான் ராணுவத்தின் ஏழு பேருந்துகளின் கான்வாயை இந்த தாக்குதல் குறிவைத்தது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு கார் நோஷ்கியில் உள்ள பேருந்துகளில் ஒன்றில் மோதியதால் கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. பலூச் விடுதலை இராணுவம் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
இது அதன் தற்கொலைத் தாக்குதல் பிரிவால் நடத்தப்பட்டதாகக் கூறியது. சமீபத்தில் 450 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில் மீது தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனிநாடு
தனிநாடு கோரி போராட்டம்
பலுசிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறை, அங்கு ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராளி குழுக்களின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது.
பாகிஸ்தான் அரசு மாகாணத்தின் இயற்கை வளங்களை சுரண்டுவதாக போராளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், தங்கள் மண்ணை விட்டு பாகிஸ்தானை வெளியேறும்படியும், தனி பலுசிஸ்தான் சுதந்திர நாட்டை உருவாக்கும் முனைப்புடனும் அவர்கள் போராடி வருகின்றனர்.
இதற்கிடையில், சனிக்கிழமை நடந்த ஒரு தனி தாக்குதலில், பாகிஸ்தான் தலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வரும் மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் மூன்று பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.
2021 ஆம் ஆண்டு காபூலில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பாகிஸ்தானின் மேற்குப் பகுதிகளில் போராளித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.