இன்னும் பாகிஸ்தானில்தான் இருக்கிறாரா தாவூத்?: 'துரந்தர் 2' கிளப்பிய பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் 'மோஸ்ட் வான்டட்' பயங்கரவாதியான தாவூத் இப்ராகிம் குறித்த மர்மங்கள், 32 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கின்றன. சமீபத்தில் வெளியான 'துரந்தர் 2' திரைப்படத்தில் வரும் "பழைய சாஹப்" கதாபாத்திரம், மீண்டும் தாவூத் இப்ராகிமை பொதுவெளியில் விவாதப் பொருளாக்கியுள்ளது. 1980-களில் துபாயில் ஒரு ராஜவாழ்க்கை வாழ்ந்த தாவூத், 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு சர்வதேச அழுத்தங்கள் காரணமாகப் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றார். 13 குண்டுவெடிப்புகள் மூலம் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரை நிலைகுலைய செய்த அவருக்குப் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துள்ளது.
ஐநா அறிக்கை
பாகிஸ்தானின் பொய்களை உடைக்கும் ஐநா அறிக்கை
பாகிஸ்தான் அரசு தொடர்ந்து தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று மறுத்து வந்தாலும், சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) அழுத்தம் காரணமாக 2020-ல் பாகிஸ்தானே வெளியிட்ட பட்டியலில் தாவூத் இப்ராகிமின் பெயர் மற்றும் கராச்சியில் உள்ள அவரது முகவரிகள் இடம்பெற்றிருந்தன. ஜூன் 11, 2025-ல் ஐநா பாதுகாப்பு கவுன்சில் புதுப்பித்த பட்டியலில் உள்ள தாவூத்தின் முகவரிகள்: 1. ஒயிட் ஹவுஸ், சவுதி மசூதி அருகில், கிளிப்டன், கராச்சி. 2. வீடு எண் 37, 30-வது தெரு, டிஃபென்ஸ் ஹவுசிங் அத்தாரிட்டி, கராச்சி. 3. நூராபாத் மலைப்பகுதியில் உள்ள ஒரு பிரம்மாண்ட பங்களா.
தொடர்பு
சர்வதேச பயங்கரவாதத் தொடர்புகள்
தாவூத் இப்ராகிம் வெறும் கடத்தல்காரர் மட்டுமல்ல, அவர் அல்-கொய்தா மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தவர் என்பதையும் ஐநா உறுதிப்படுத்தியுள்ளது. ஒசாமா பின் லேடனின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பிலும் இவருக்கு பங்கு உண்டு. இதன் காரணமாக 2003-ல் அமெரிக்கா இவரை 'சர்வதேச பயங்கரவாதி' என அறிவித்தது.
இந்தியா
இந்தியா வைக்கும் குற்றச்சாட்டு
கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய இந்தியத் தூதர், "1993 குண்டுவெடிப்பிற்கு காரணமான குற்றவாளி, அண்டை நாட்டில் அனைத்து வசதிகளுடனும், அந்த அரசின் ஆதரவுடனும் வாழ்ந்து வருகிறார்" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். தற்போது பாகிஸ்தான், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 'அமைதி வாரியத்தில்' உறுப்பினராக இருந்துகொண்டு, ஒரு சர்வதேச பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்து வருவது உலக நாடுகளிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. தாவூத் இப்ராகிம் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்ற கேள்வியை விட, அவர் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதே இந்தியா முன் வைக்கும் முக்கியக் கேள்வியாகும்.