அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் பெண் பெயர் கொண்ட சூறாவளிகள், புதிய ஆய்வு முடிவுகள்
ஆண் பெயர் கொண்ட சூறாவளிகளை விட பெண் பெயர் கொண்ட சூறாவளிகள் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியிருப்பதாக, தங்களுடைய புதிய ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றனர் அலகாபாத்தின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள். இந்த புதிய ஆய்வுக்காக 1950-ல் இருந்து 2012-வரை அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளிகளை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். பெண் பெயர் கொண்ட சூறாவளிகள் சராசரியாக 41.84 உயிரிழப்புகளையும், ஆண் பெயர் கொண்ட சூறாவளிகள் 15.15 உயிரிழப்புகளையும் ஏற்படுத்துவதாக இந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் பெண் பெயர் கொண்ட சூறாவளிகளை மக்கள் மிகவும் ஆபத்தானதாக எடுத்துக் கொள்வதில்லை என்றும், அதனை எதிர்கொள்வதில் மெத்தனம் காட்டுவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயத்தை ஏற்படுத்தும் ஆண் பெயர் கொண்ட சூறாவளிகள்:
உதாரணத்திற்கு 'பிரிசில்லா' என்ற பெயர் கொண்ட சூறாவளி குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாத அதே நேரத்தில், 'புருனோ' என்ற பெயர் கொண்ட சூறாவளி மிகவும் ஆபத்தானதாக உணர்வை ஏற்படுத்துவதாக மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், 1979-ம் ஆண்டு வரை ஏற்பட்ட சூறாவளிகளுக்கு பெண்களின் பெயர்களை மட்டுமே வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. 1979-ம் ஆண்டுக்குப் பின்பே ஆண் மற்றும் பெண் பெயர்கள் மாற்றி மாற்றி சூறாவளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சூறாவளி குறித்த அறிவிப்புகளை தெளிவாக மக்களுக்கு தெரியப்படுத்தவும், அது குறித்த தகவல்களைப் பராமரிப்பதிலும் பகிர்வதிலும் எழும் குழப்பங்களைத் தவிர்க்கவே சூறாவளிகளுக்குப் பெயர் சூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.