போயிங் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரை
போயிங் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை நீதித்துறை (DOJ) கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரைத்துள்ளனர். 737 மேக்ஸ் விமானம் சம்பந்தப்பட்ட இரண்டு அபாயகரமான விபத்துக்கள் தொடர்பான ஒப்பந்தத்தை போயிங் மீறியதாக நீதித்துறை கூறியதை அடுத்து போயிங் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். ஆனால், நீதித்துறையின் குற்றச்சாட்டை போயிங் மறுத்துள்ளது. வழக்கறிஞர்களின் பரிந்துரை குறித்து பிபிசி போயிங்கை தொடர்பு கொண்ட போது கருத்து தெரிவிக்க போயிங் மறுத்துவிட்டது. மேலும், இதற்கு DOJயும் உடனடியாக பதிலளிக்கவில்லை. வழக்கறிஞர்கள் பரிந்துரைக்க மட்டுமே செய்துள்ளனர். இதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
போயிங்கிற்கு $25bn அபராதம் விதிக்க கோரிக்கை
போயிங் மீது வழக்குத் தொடர வேண்டுமா என்பது குறித்து DOJ ஜூலை 7 அன்று இறுதி முடிவை எடுக்க உள்ளது. விமானப் பாதுகாப்புக்கான அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும் போயிங்கின் முன்னாள் மூத்த மேலாளருமான எட் பியர்சன், "போயிங் விமானங்களில் சிக்கல்கள் உள்ளன. அந்த விமானங்களில் சிக்கல்களை நாங்கள் காண்கிறோம். நான் 737 மேக்ஸ் மற்றும் 787 பற்றி பேசுகிறேன்." என்று கூறியுள்ளார். 2018 இல் இந்தோனேசியாவிலும் 2019 இல் எத்தியோப்பியாவிலும் நடந்த 2 விபத்துகளில் மொத்தம் 346 பேர் கொல்லப்பட்டனர். கடந்த வாரம், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போயிங்கிற்கு $25bn (£14.6bn) அபராதம் விதிக்க வேண்டும் என்றும், போயிங் மீது குற்றவியல் வழக்கு தொடர வேண்டும் என்று வழக்கறிஞர்களிடம் வலியுறுத்தினர்.