பாகிஸ்தானில் நீர்மூழ்கி போர் கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கும் சீனா
சீனாவும் பாகிஸ்தானும் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சிகளை இணைந்து தொடங்கியுள்ள நிலையில், பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் சீனாவின் போர்கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை நிரூபிக்கும் வகையில் NDTV செய்தி நிறுவனம் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீனா தனது கடல் பிரசன்னத்தை கணிசமாக விரிவுபடுத்தி இருக்கும் நேரத்தில் 'சீ கார்டியன்-3 பயிற்சிகள்' என்ற சீனா-பாகிஸ்தான் இருதரப்பு பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவின் கொம்பில் உள்ள ஜிபூட்டியில் ஒரு முக்கிய சீன தளத்தை நிறுவியது, பிற நாட்டு கடற்படைகளுக்கு பல நவீன கப்பல்களை விற்பனை செய்தது போன்ற இராணுவ யுக்திகள் மூலம் சீனா, இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் தனது இருப்பை வலுப்படுத்தி வருகிறது.
இந்திய பெருங்கடலுக்கு ஏற்றவாறு போர்கப்பல்களை உருவாக்கும் சீனா
இந்நிலையில், தற்போது பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் தனது போர்கப்பலைகளை சீனா நிறுத்தி வைத்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியப் பெருங்கடலில் பல சீனக் கண்காணிப்பு மற்றும் கடல்சார் ஆய்வுக் கப்பல்களும் கண்டறியப்பட்டன. இந்த மாத தொடக்கத்தில், சீனாவின் பெருங்கடல் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6, கொழும்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நீர்மூழ்கி கப்பல்களை திறம்பட இயக்க, வங்காள விரிகுடா, அரபிக்கடல், உட்பட இந்தியப் பெருங்கடலில் உள்ள நீரை சீனா தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருவதாக நம்பப்படுகிறது. சீன கடற்படை இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி போர் கப்பல்களை நிறுத்தி வைப்பது 2013 முதல் இது 8வது முறையாகும்.இந்தியப் பெருங்கடலில் அணுசக்தியால் இயங்கும் விரைவுத் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களையும் சீனா இயக்கியதாக கூறப்படுகிறது.