சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் - பயணங்களை குறைத்துக்கொள்ள சீன அரசு அறிவுறுத்தல்
கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக வேகமெடுத்துவருகிறது. பெய்ஜிங், ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, மருந்துகளுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் தற்போது பரவி வரும் பிஎப் 7 வகை வைரஸால் அடுத்த 3 மாதங்களில் சீன மக்கள் தொகையில் 60% பாதிக்கக்கூடும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் நினைத்ததைவிட அதிக வீரியம் கொண்டதாக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், சீனாவில் நேரும் மரணங்களை கணக்கிடுவது பெரும் சவாலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
கொரோனா அதிகரிப்பு - மக்களுக்கு சீன அரசு வேண்டுகோள்
இதனிடையே சீன புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அடுத்த மாதம் 15ம் தேதி வரை சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, கிட்டத்தட்ட 200 பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயால் பாதிக்கப்பட்டோர் பயணங்களை தவிர்த்து கொள்வது நல்லது என்று சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த மாதம் மட்டும் சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 40% பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. கொரோனாவின் புதிய அலை சீனாவில் பேரிழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான அணுகுமுறையில் நாடு 'புதிய கட்டத்தில்' நுழைவதாக தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் அந்நாட்டு அதிபர் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.