Page Loader
சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை 
சட்டத்தை மீறியவர்களுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.

சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை 

எழுதியவர் Sindhuja SM
Apr 13, 2023
05:05 pm

செய்தி முன்னோட்டம்

புனித ரம்ஜான் மாதத்தில் உய்குர் முஸ்லீம்கள் நோன்பு நோற்காமல் இருப்பதற்கு சீன போலீசார் உளவாளிகளை வைத்து கண்காணித்து வருகின்றனர். "எங்களிடம் பல ரகசிய உளவாளிகள் உள்ளனர்" என்று ரேடியோ ஃப்ரீ ஏசியாவிடம் பேசிய சீன போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ​​முதன்முதலில், 2017ஆம் ஆண்டு சின்ஜியாங்கில் உள்ள முஸ்லீம்கள் ரம்ஜான் நோன்பு நோற்க கூடாது என்று சீனா தடை விதித்தது. உய்குர் முஸ்லீம்களின் கலாச்சாரம், மொழி மற்றும் மதத்தை ஒடுக்குவதற்காக சீனா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் உள்ள உய்குர் முஸ்லீம்கள் "மறு கல்வி" முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ரம்ஜான் தடைகள் தளர்த்தப்பட்டிருந்தது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோன்பு இருக்க சீன அரசு அனுமதித்தது.

details

சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட உய்குர் முஸ்லீம்கள்

உய்குர்களின் வீடுகளில் சோதனை நடத்துவது மற்றும் தெருக்களில் ரோந்து செல்வது ஆகியவை கடந்த இரண்டு வருடங்களாக குறைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு, முஸ்லீம்கள் யாரும் நோன்பு இருக்க கூடாது என்று சீன அரசு தடை விதித்துள்ளதாக டர்பன் நகர காவலர் ஒருவர் கூறியிருக்கிறார். ரம்ஜானின் முதல் வாரத்தில், சீன அதிகாரிகள் 56 உய்குர் குடியிருப்பாளர்களையும், முன்னாள் கைதிகளையும் அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். விசாரணையின் போது அவர்கள் நோன்பு இருந்தது தெரியவந்தது. அதனால், அவர்கள் சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது. சட்டத்தை மீறியவர்களுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக சீனா ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைத்துள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் நம்புகின்றன.