ராணுவ படைகளை அனுப்பி தைவானை பயமுறுத்தும் சீனா: என்ன நடக்கிறது
தைவானைச் சுற்றி சீனா நடத்திய மூன்று நாள் போர் ஒத்திகை "வெற்றிகரமாக முடித்தது" என்று சீனா தெரிவித்துள்ளது. தனி நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தைவானின் ஜனாதிபதி, அமெரிக்க சபாநாயகரைச் சமீபத்தில் சந்தித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை தைவான் எல்லைக்கு அனுப்பிய சீனா, இதை மூன்று நாள் இராணுவப் பயிற்சிகள் என்று குறிப்பிட்டது. தைவான், அமெரிக்கா மற்றும் உலகிற்கு முன்னால் பெய்ஜிங்கின் இராணுவ சக்தியை காட்டும் விதமாக இந்த பயிற்சிகள் அமைந்திருந்தன. தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென், அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்தால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கடந்த வாரம் சீனா எச்சரித்திருந்த நிலையில், இந்த பயிற்சிகள் நடத்தபட்டிருக்கிறது.
தைவான் எல்லையில் சீனா நிதானம் காட்ட வேண்டும்: அமெரிக்கா
ஏப்ரல் 5 ஆம் தேதி கலிபோர்னியாவில் இந்த சந்திப்பு நடந்தது. சனிக்கிழமை , தைவானை சுற்றி வழைத்த பெய்ஜிங்கின் ஜெட் விமானங்கள் மற்றும் கப்பல்கள், இந்த "ராணுவ பயிற்சியை" தொடங்கியது. மேலும், தற்போது இந்த பயிற்சி முடிவடைந்திருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. தைவான் ஒரு தனி நாடாக கருதப்பட்டாலும், அந்த நாட்டை சீனா தனது பிராந்தியத்தில் ஒன்று என்று கூறி வருகிறது. சாய் உடனான தனது சந்திப்பிற்குப் பிறகு, மெக்கார்த்தி, தைவானுக்கான அமெரிக்க ஆயுத விற்பனை தொடரும் என்றும், போருக்கு எதிரான ஒரு தடுப்பாக இது செயல்படும் என்றும் கூறினார். இந்த ராணுவ பயிற்சியை அடுத்து, தைவான் எல்லையில் சீனா நிதானம் காட்ட வேண்டும் என்று அமெரிக்கா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.