சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு
கோவிட்-19 நோய்த்தொற்றின் புதிய அலைக்கு சீனா தயாராகி வருகிறது. இது ஜூன் மாத இறுதிக்குள் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குவாங்டாங் மாகாணத்தின் குவாங்சோவில் நடைபெற்று வரும் 2023 கிரேட்டர் பே ஏரியா அறிவியல் மன்றத்தில் சீனாவின் உயர்மட்ட சுவாச நிபுணர் ஜாங் நன்ஷன் இது குறித்து எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸ்-ஓமிக்ரானின் XBB மாறுபாடு சீனாவில் பரவ தொடங்கி இருக்கிறது. அதன் பரவல் காரணமாக, ஜூன் இறுதிக்குள், சீனாவில் ஒவ்வொரு வாரமும் 65 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வழக்குகள் பதிவாகலாம் என்றும், புதிய கோவிட் மாறுபாட்டை சமாளிக்க 2 புதிய தடுப்பூசிகளை சீனா உருவாக்கி வருகிறது என்றும் ஜாங் நன்ஷன் கூறியுள்ளார்.
சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கை
XBB மாறுபாடு ஓமிக்ரானின் ஒரு வகையாகும். ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே மாத தொடக்கத்திற்குள் கொரோனாவின் சிறிய அலை வரும் என்று சீன வல்லுநர்கள் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தனர். தற்போது, மே மாத இறுதிக்குள், சீனாவில் புதிய கோவிட் மாறுபாட்டின் காரணமாக, ஒவ்வொரு வாரமும் சுமார் 40 மில்லியன் பாதிப்புகள் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, ஜூன் மாதத்தில் கொரோனா வழக்குகள் உச்சத்தில் இருக்கும். 2020ஆம் ஆண்டு, கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, சீன அரசாங்கம் சீனா முழுவதும் ஜீரோ கோவிட் கொள்கையை அமல்படுத்தியது. இது கடுமையான ஊரடங்கு கொள்கையாக இருந்தது. மூன்று வருடங்களுக்கு பின், இந்த ஜீரோ கோவிட் கொள்கை சில மாதங்களுக்கு முன் தான் தளர்த்தப்பட்டது.