இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது- சீனா
இஸ்ரேலுக்கு, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தங்களை தற்காத்துக்கொள்ள உரிமை உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனிய போரில், சீனாவின் நிலைப்பாடு கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையிலும், வெளியுறவு அமைச்சர் வாங் யி-இன் அமெரிக்க பயணத்தை ஒட்டியும், இவ்விவகாரத்தில் சீனா தன் நிலையை மாற்றி உள்ளது. கடந்த வாரம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உடனடி போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்திய சீன அதிபர் ஜி ஜின்பிங், "பாலஸ்தீனப் பிரச்சினைக்கு விரிவான, நியாயமான மற்றும் நீடித்த தீர்வை விரைவில் ஏற்படுத்த வேண்டும்" எனக் கூறியிருந்தார். மேலும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங், அக்டோபர் 26 ஆம் தேதி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்று, வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரிகளை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சரிடம் பேசிய சீன அமைச்சர்
இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் இடம்,தொலைபேசியில் பேசிய சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங், "ஒவ்வொரு நாட்டிற்கும் தங்களை தற்காத்துக்கொள்ள உரிமை உள்ளது, ஆனால் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு கட்டுப்பட்டு பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும்" என தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அக்டோபர் 7ஆம் தேதி போர் தொடங்கியது முதல், முதல்முறையாக இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது என சீனா கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நாடாளுமன்ற செனட் பெரும்பான்மை தலைவர் சக் ஷுமர், இப்போரில் சீனாவை, இஸ்ரேலுடன் நிற்க வலியுறுத்தி இருந்தார்.