சீனாவிடம் 500 அணு ஆயுத ஏவுகணைகள் உள்ளது- அமெரிக்கா தகவல்
சீனா தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், தற்போது 500 அணு ஆயுத ஏவுகணைகள் வரை சீனாவிடம் இருக்கலாம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில், சீனா 2030 ஆம் ஆண்டுக்குள் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 1,000ஆக உயர்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சீனா, அதன் "முதலில் தாக்கமாட்டோம்" என்ற அணு ஆயுத கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனா, கணிக்கப்பட்டதை விட அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு, சீனாவிடம் 400 அணு ஆயுத ஏவுகணைகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் நடவடிக்கை கவலைகளை அதிகரித்துள்ளது- அமெரிக்கா
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மூத்த பென்டகன் அதிகாரி, சீனாவின் இந்த நடவடிக்கை "கவலைகளை அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். சீனா அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2012 ஆம் ஆண்டு பதவி ஏற்றது முதல் தொடர்ந்து ராணுவத்தை நவீனமயமாக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் 2049 ஆம் ஆண்டுக்குள் சீனா "உலகத்தரம் வாய்ந்த ராணுவத்தை" கட்டமைக்கும் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார். சீனாவின் அணு ஆயுத கையிருப்பு, கணிப்புகளை விட அதிகரித்து இருந்தாலும், அது அமெரிக்க மற்றும் ரஷ்யாவின் அணு ஆயுதங்களின் கையிருப்பை காட்டிலும் மிகவும் குறைவு. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின் படி, ரஷ்யாவிடம் 5,889 அணு ஆயுத ஏவுகணைகளும், அமெரிக்காவிடம் 5,244 அணு ஆயுத ஏவுகணைகளும் உள்ளன.