Page Loader
சீனா: 'போலி செய்திகளை' பரப்பியதற்காக ஒரு மாதத்தில் ஒரு லட்சம் கணக்குகள் முடக்கம்
போலி செய்திகளை பரப்பிய 107,000 கணக்குகள் மற்றும் 835,000 போலி தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன

சீனா: 'போலி செய்திகளை' பரப்பியதற்காக ஒரு மாதத்தில் ஒரு லட்சம் கணக்குகள் முடக்கம்

எழுதியவர் Sindhuja SM
May 17, 2023
06:57 pm

செய்தி முன்னோட்டம்

தவறான செய்திகள் மற்றும் வதந்திகளை தடுப்பதற்கான முயற்சிகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக, கடந்த மாதத்தில் 100,000க்கும் மேற்பட்ட சமூக வலைதள கணக்குகளை சீனா முடக்கியுள்ளது. முடக்கப்பட்ட கணக்குகள் செய்தி அறிவிப்பாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை தவறாக சித்தரிப்பதாக சீனாவின் சைபர்ஸ்பேஸ் கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார். சைபர்ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஆஃப் சீனா(CAC) ஆன்லைன் தகவல்களைச் சுத்தப்படுத்த ஒரு சிறப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரம், "போலி செய்திகளை" பரப்பும் மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் சமூக ஊடக கணக்குகளின் மேல் கவனம் செலுத்துகிறது.

details

அரசு செய்தி நிறுவனங்கள் போல் ஆள்மாறாட்டம் செய்த சமூக வலைதள கணக்குகள் 

ஏப்ரல் 6 முதல், போலி செய்திகளை பரப்பிய 107,000 கணக்குகள் மற்றும் 835,000 போலி தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பரப்பப்படும் போலி செய்திகளுடன் உலக நாடுகள் போராடி வரும் நிலையில், அதை தடுப்பதற்காக சீனா இந்த முடிவை எடுத்துள்ளது. இணையத்தில் போலி செய்திகள் அதிகரித்து வருவதால், அதை தடுப்பதற்காக பல நாடுகளில் புதிதாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, சீன சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு செய்தி நிறுவனங்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து செய்திகளை வெளியிடும் சமூக வலைதள கணக்குகள் கண்டறியப்பட்டதாக CAC தனது மதிப்பாய்வில் கூறியுள்ளது.