இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா: செயற்கைகோள் படங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் நேபாளத்தின் முச்சந்தி எல்லைக்கு வடக்கே, யார்லாங் சாங்போ(பிரம்மபுத்திரா) ஆற்றில் சீனா புதிய அணை ஒன்றை உருவாக்கி வருவதாக புவியியல் புலனாய்வு ஆய்வாளர் டேமியன் சைமன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று(ஜன:19) தெரிவித்துள்ளார்.
புதிய செயற்கைக்கோள் படங்களுடன் பகிரப்பட்ட இந்த பதிவில் அவர், "2021ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து, இந்தியா மற்றும் நேபாளத்துடனான முச்சந்தி எல்லைக்கு வடக்கே சில கிலோமீட்டர் தொலைவில் யார்லாங் ஜாக்போ ஆற்றின் மீது சீனா ஒரு அணையைக் கட்டி வருகிறது.
கட்டமைப்பு முழுமையடையாத நிலையில், இந்தத் திட்டத்தால் அந்த பகுதியில் உள்ள தண்ணீர் மீது சீனாவின் கட்டுப்பாடுகள் எப்படி இருக்குமோ என்பது கவலையை எழுப்புகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
சீனா
சீன அணையின் விவரங்கள்
வெளியிடப்பட்ட செயற்கைக்கோள் படங்களில், திபெத்தின் யார்லாங் சாங்போ ஆற்றில் அணை கட்டும் பணி சீன தரப்பால் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணலாம்.
திபெத்தில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு(LAC) அருகில் ஒரு 'சூப்பர்' அணையைக் கட்டும் திட்டத்தை சீனா 2020ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த செய்தியை சீன ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
இந்த அணையின் செயற்கைகோள் படங்களே தற்போது வெளியாகி இருக்கிறது.
பிரம்மபுத்திரா ஆற்று நீர் திபெத்தில் இருந்து அருணாச்சல பிரேதேசத்தை கடந்து அசாம் வரை செல்கிறது.
கடந்த டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற 17வது கார்ப்ஸ்-கமாண்டர் நிலைக் கூட்டத்தில் இரு தரப்பு ராணுவ கமாண்டர்களும் இந்திய-சீன எல்லை பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பராமரிக்க ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில், வெளியாகி இருக்கும் இந்த செய்தி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.