Page Loader
10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிக்க இருக்கும் கனடா
2024இல் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் 10,000 உய்குர் அகதிகளை கனடா ஏற்றுக்கொள்ள இருக்கிறது

10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிக்க இருக்கும் கனடா

எழுதியவர் Sindhuja SM
Feb 02, 2023
03:56 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவை விட்டு வெளியேறிய 10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிப்பதற்கான தீர்மானத்தை கனடாவின் பாராளுமன்றம் நேற்று(பிப் 01) ஒருமனதாக நிறைவேற்றியது. பெய்ஜிங்கின் வடமேற்கு ஜின்ஜியாங் பிரதேசத்தில் உள்ள உய்குர் மற்றும் பிற துருக்கிய முஸ்லிம்களை சீனா, இனப்படுகொலை செய்கிறது என்று கனேடிய சட்டமியற்றுபவர்கள் பிப்ரவரி 2021இல் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். அதன் அடிப்படையில் தற்போது இந்த நடவடிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு மில்லியன் உய்குர்களும் மற்ற முஸ்லீம் சிறுபான்மையினரும் இப்பகுதியில் உள்ள தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று உரிமைக் குழுக்கள் நம்புகின்றன. அந்த முகாமில் சீனா, பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்து வருவதாகவும் முஸ்லீம்களை அடிமைகளாக நடத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால், அந்த பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தப்பினர்.

கனடா

உய்குர்களுக்கு நடக்கும் விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது: கனடா

தப்பி சென்றவர்களில் குறைந்தது 1,600 பேர் சீனாவின் உத்தரவின் பேரில் மற்ற நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சிலர் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் இந்த தீர்மானத்திற்கு உறுதுணையாக நின்ற கனடா பாராளுமன்ற உறுப்பினர் சமீர் சுபேரி கூறியுள்ளார். "உய்குர் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதற்கான தெளிவான உதாரணம் இது" என்று கூறிய சமீர் சுபேரி, "உய்குர்களுக்கு நடக்கும் விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் கூறினார். சீனா, அகதிகளைத் தடுத்துவைப்பதற்கு பிற நாடுகளின் மீது தூதரக மற்றும் பொருளாதார அழுத்தங்களைப் கொடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கனடாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில், 2024இல் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் 10,000 உய்குர் அகதிகளை கனடாவில் மீள்குடியேற்றுவதற்காக முன்மொழியப்பட்டுள்ளது.