டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்.. கொண்டு வருகிறது பிரிட்டன்!
கூகுள், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் உள்ளிட்ட பெரிய டெக் நிறுவனங்களை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை அமல்படுத்தும் முடிவில் இருக்கிறது பிரிட்டன். இந்த புதிய சட்டமானது பயனர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சந்தையைக் கண்காணிப்பதற்காகவும், அதனை வரைமுறைப்படுத்துவதற்காகவும் தனிப்பட்ட அமைப்பு ஒன்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியது பிரிட்டனின் Competition and Market Authority (CMA). ஆனால், டிஜிட்டல் சந்தையில் போதிய நடவடிக்கைகள் எடுப்பதற்கான சட்ட வரையறை இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், டிஜிட்டல் சந்தையில் போட்டியாளர்களை நெறிமுறைப்படுத்துவதற்குத் தேவையான அதிகாரத்தை CMA-வின் டிஜிட்டல் சந்தை அமைப்புக்கு வழக்கும் வகையில் புதிய சட்டத்தை அமல்படுத்தவிருக்கிறது பிரிட்டன்.
புதிய சட்டம்:
உளகளவில் 25 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் வருவாய் ஈட்டும் அல்லது பிரிட்டனில் 1 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் வருவாய் ஈட்டும் டெக் நிறுவனங்கள் இந்த புதிய அமைப்பின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளின் கீழ் வரும். கடந்த ஆண்டே டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதற்கா சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் அமல்படுத்தியது. ஆனால், அதற்கு கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட டெக் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சிறிய நிறுவனங்கள் மற்றும் பயனர்கள் மீதான டெக் நிறுவனங்களின் ஆதிக்கத்தை இந்த புதிய சட்டம் குறைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அவற்றின் உலகளாவிய வருவாயில் இருந்து 10% வரை அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.