லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கி, பூதாகரமாக உருவெடுக்கும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் கலப்பட இருமல் மருந்து விவகாரம்
இந்தியாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தைச் உட்கொண்டு, உஸ்பெகிஸ்தான் நாட்டு குழந்தைகள் 65 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு இந்தியர் உட்பட 21 பேர் மீது உஸ்பெகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. மரியான் பயோடெக் நிறுவனத்தின் மருந்துகளை, குராமேக்ஸ் மெடிக்கல் என்ற நிறுவனமே உஸ்பெகிஸ்தானில் விநியோகம் செய்து வந்திருக்கிறது. இந்த, நிறுவனத்தின் சிஇஓ மற்றும் இரண்டு நிர்வாகிகளும், மேற்கூறிய 21 பிரதிவாதிகளுள் அடக்கம். இந்த 21 பேரில், 7 பேர், வரி ஏய்ப்பு, போலி மருந்து விற்பனை, அதிகார துஷ்பிரயோகம் என சில குற்றங்களைச் செய்திருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியர் மீது லஞ்சப் புகார்:
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சையதுகரிம் அகிலோவ் வாதாடும் போது, குராமேக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ, சிங் ராகவேந்திர பிரதார், மேற்கூறிய இருமல் மருந்தின் கட்டாய தர பரிசோதனையைத் தவிர்க்க, அதிகாரிகளுக்கு 33,000 டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த கட்டாய தர பரிசோதனை, இந்தியாவிலா அல்லது உஸ்பெகிஸ்தானிலா என்பது குறித்த விபரங்களை அரசு வழக்கறிஞர் தெளிவாக விவரிக்கவில்லை. தன் மீது வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை மறுத்த பிரதார், அதிகாரிகளுக்கு இடைத்தரகர் மூலமாக தான் பணம் கொடுத்ததை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், அதனை லஞ்சமாகக் கொடுக்கவில்லை எனத் தெரிவித்திருக்கும் அவர், அது எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தனக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.