ஈரானின் குண்டு வீச்சிற்கு பின்னர் கடற்கரையில் விடுமுறையை கொண்டாட கிளம்பிய இஸ்ரேலிய மக்கள்
தற்கொலை ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் பன்முகத் தாக்குதலை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, இஸ்ரேலியர்கள் கடற்கரைகளில் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இஸ்ரேல்-ஈரான் போர் விவகாரத்தால் உலகளாவிய அரசியல் விவாதம் மற்றும் மத்திய கிழக்கில் ஸ்திரமற்ற நிலைமைகள் இருந்தபோதிலும், உள்ளூர்வாசிகள் இதுபோன்ற விஷயங்களுக்குப் பழகிவிட்டதாகத் தெரிகிறது. ஏப்ரல் 14, 2024 அன்று இஸ்ரேலிய கடலோர நகரமான நெதன்யாவில் உள்ள ஒரு காபி கடையில் இஸ்ரேலியர்கள் அமர்ந்து தங்கள் பொழுதை கழிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஈரான் தனது முதல் நேரடி தாக்குதலை ஏப்ரல் 13ஆம் தேதி பிற்பகுதியில் இஸ்ரேலின் மீது நடத்தியது.
ஈரானின் தாக்குதலுக்கு அமெரிக்காவின் ரியாக்ஷன்
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து ஜோர்டான், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அதே நேரத்தில் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், தனது சவுதி மற்றும் இஸ்ரேலிய சகாக்களுடன் தொடர்பு கொண்டார். கடந்த வார இறுதியில் ஈரான், இஸ்ரேல் மீது 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசியது. எனினும், ஏறக்குறைய அனைத்து ஈரானிய ஆளில்லா விமானங்களும், ஏவுகணைகளும் தங்கள் இலக்குகளை அடைவதற்கு முன்பே இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் நேச நாட்டுப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன என இஸ்ரேல் தரப்பு கூறியது.