
பிரிட்டனின் வெளிநாட்டு உளவுப்பிரிவான எம்ஐ 6 அமைப்புக்கு முதல் முறையாக பெண் தலைவராக நியமனம்
செய்தி முன்னோட்டம்
பிரிட்டன் ரகசிய புலனாய்வு சேவைகளில் ஒன்றான எம்ஐ 6 உளவுத்துறையின் தலைவராக முதல்முறையாக பிளேஸ் மெட்ரெவேலி என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது நாட்டின் வெளிநாட்டு உளவுப் பிரிவிற்கு ஒரு வரலாற்று தருணத்தைக் குறிக்கிறது.
47 வயதான மெட்ரெவேலி, தற்போது எம்ஐ 6 அமைப்பின் தொழில்நுட்பத் தலைவராக உள்ளார். பாரம்பரியமாக "Q" என்று இந்த பதவி அழைக்கப்படும்.
அதே நேரத்தில் "C" என்ற குறியீட்டுப் பெயருடன் அழைக்கப்படும் எம்ஐ 6 உளவுத்துறை தலைவர் பதவியில் இருந்த ரிச்சர்ட் மூர் விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து பிளேஸ் மெட்ரெவேலி பொறுப்பேற்பார்.
பின்னணி
பிளேஸ் மெட்ரெவேலியின் பின்னணி
பிளேஸ் மெட்ரெவேலி 1999 இல் எம்ஐ 6 அமைப்பில் சேர்ந்தார் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா முழுவதும் முதன்மையாக செயல்பாட்டுப் பணிகளில் பணியாற்றியுள்ளார்.
ஏற்கனவே எம்ஐ 5 மற்றும் ஜிசிஎச்கியூ ஆகிய பிரிட்டன் உளவுப்பிரிவுகளுக்கு பெண்கள் தலைவராக பொறுப்பு வகித்த நிலையில், தற்போது எம்ஐ 6 அமைப்பிலும் பெண் தலைவர் பதவியை ஏற்கிறார்.
1909 இல் நிறுவப்பட்ட எம்ஐ 6, ஜேம்ஸ் பாண்ட் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் புனைகதைகளில் பிரபலமாக சித்தரிக்கப்பட்டது.
நடிகை ஜூடி டென்ச் 1995 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான கோல்டன் ஐயில் ஒரு கற்பனையான பெண் எம்ஐ 6 தலைவரை சித்தரித்த கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிஜத்தில் அந்த பதவிக்கு பெண் நியமனம் நடந்துள்ளது.