திருடச் சென்ற வீட்டில் சமைத்து, துணிதுவைத்து வைத்துச் சென்ற வினோத திருடன்; இங்கிலாந்தில் நடந்த ருசீகர சம்பவம்
இங்கிலாந்தின் மொன்மவுத்ஷிரில் நடந்த ஒரு வினோதமான திருட்டு வழக்கில், 36 வயதான டாமியன் வோஜ்னிலோவிச் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் திருடச் சென்றபோது செய்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் வெறுமனே திருடுவதற்குப் பதிலாக, வீட்டில் சமைத்தல், சுத்தம் செய்தல், குளிர்சாதனப் பெட்டியில் பொருட்களை சரியாக வைத்தல் மற்றும் துணி துவைத்தல் ஆகிய வேலைகளைச் செய்துள்ளார். மேலும், அங்கிருந்து கிளம்பும் முன், வோஜ்னிலோவிச், "கவலைப்படாதே, சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக இரு." என்று ஒரு குறிப்பையும், ஒரு கிளாஸுடன் ஒரு மது பாட்டிலையும் கூட விட்டுச் சென்றுள்ளார். ஜூலை 16 ஆம் தேதி நிகழ்ந்த அசாதாரண சம்பவத்தால், உண்மையில் அங்கு வசித்த பெண் மிகவும் பயந்துவிட்டார்.
சிக்கியது எப்படி?
இந்த சம்பத்தால், அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாமல் பயந்துபோன அந்த பெண், தனது சொந்த வீட்டை விட்டு நண்பரின் வீட்டில் தங்கியுள்ளார். இதற்கிடையே, வோஜ்னிலோவிச் இந்த சம்பவத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், ஜூலை 29 அன்று, மற்றொரு வீட்டிற்குள் நுழைந்து, அங்கும் இதுபோன்ற வினோதமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டின் உரிமையாளருக்கு சிசிடிவி மூலம் தகவல் கிடைக்க வோஜ்னிலோவிச் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு கார்டிஃப் கிரவுன் நீதிமன்றம் வோஜ்னிலோவிச்க்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அந்த நேரத்தில் அவர் வீடற்றவராகவும் தனிப்பட்ட சிரமங்களுடன் போராடியதாகவும் கூறப்படுகிறது. அவரது வழக்கத்திற்கு மாறான திருட்டு பாணி இருந்தபோதிலும், நீதிமன்றம் அவரது நடவடிக்கைகளை மக்களின் வீடுகளுக்குள் ஊடுருவல் என்று தீர்ப்பளித்து தண்டனை வழங்கியுள்ளது.