Page Loader
பினான்ஸ் கிரிப்டோ தளத்தின் மீது புகார்களை அடுக்கிய SEC.. என்ன நடந்தது?
பினான்ஸின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான சாங்பெங் சௌ

பினான்ஸ் கிரிப்டோ தளத்தின் மீது புகார்களை அடுக்கிய SEC.. என்ன நடந்தது?

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 06, 2023
10:41 am

செய்தி முன்னோட்டம்

சீனாவைச் சேர்ந்த சாங்பெங் சௌ என்பவரால் 2017-ல் உருவாக்கப்பட்ட கிரிப்டோ வர்த்தக தளம் பினான்ஸ்(Binance). இவரும் இவரது நிறுவனமும் பல்வேறு சட்டங்களை மீறியிருப்பதாக 13 குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்கு பதிவு செய்யப்பபட்டிருக்கிறது. கிரிப்டோவின் வர்த்தக அளவை பொய்யாகக் கையாண்டது, வாடிக்கையாளர்களின் பணத்தை இரகசியான முறையில் தன்னுடைய விருப்பத்திற்கு முதலீடு செய்தது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகளை அவர் மீதும், அவரது நிறுவனத்தின் மீதும் சுமத்தியிருக்கிறது அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் நீதித்துறையானது, குற்றச்செயல்களுக்கு பணம் வழங்கியது மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளை இவர் மீது சுமத்தி விசாரணை நடத்தி வருகிறது. உலகின் பெரிய மற்றும் முன்னணி கிரிப்டோ வர்த்தக தளமாக பினான்ஸ் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கிரிப்டோ

யார் இந்த சாங்பெங் சௌ? 

சீனாவில் பிறந்த சாங்பெங் சொ, 1989-ல் தன்னுடைய 12 வயதில் கனடாவிற்கு குடிபெயர்கிறார். டோக்கியோ, நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை பார்த்துவிட்டு 2017-ல் ஷாங்காயில் தன்னுடைய புதிய கிரிப்டோ வர்த்தகத் தளமான பினான்ஸைத் தொடங்குகிறார். ஆறே மாதத்தில் உலகின் முன்னணி கிரிப்டோ வர்த்தகத் தளமாக உருவெடுக்கிறது பினான்ஸ். தற்போது உலகில் வர்த்தகம் செய்யப்படும் 60% கிரிப்டோக்கள் இந்த பினான்ஸ் தளத்திலேயே வர்த்தகம் செய்யப்படுகின்றன. கிரிப்டோவின் மீது சீனா கடுமையான விதிமுறைகள் விதித்ததையடுத்து சீனாவில இருந்த வெளியேறி வேறு இடத்தில் தன்னுடைய புதிய நிறுவனத்தை அமைக்கிறார் சாங்பெங். ஆனால், இந்த நிறுவனத்தின் இருப்பிடம் குறித்த தகவல்களை அவர் இப்போது வரை பகிர்ந்து கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.