ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய 4 கிமீ நீள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினரிடையே போர் நீடித்து வரும் நிலையில், காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் கட்டமைத்துப் பயன்படுத்தி வந்த 4 கிமீ நீள சுரங்கப்பாதை ஒன்றை இஸ்ரேல் ராணுவம் கண்டறிந்து கைப்பற்றியிருக்கிறது. இந்த சுரங்கப்பாதை குறித்த தகவல்கள் மற்றும் காணொளிகள் அடங்கிய பதிவொன்றையும் தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது இஸ்ரேல் ராணுவம். இந்தக் குறிப்பிட்ட சுரங்கப்பாதையானது, காஸா மற்றும் இஸ்ரேல் இடையிலான எரஸ் (Erez) எல்லைப்பகுதியிலிருந்து வெறும் 400 மீ தூரத்தில் அமைக்கப்பட்டிருந்திருக்கிறது. மேலும், இஸ்ரேலுக்குள் நுழையும் பல்வேறு காஸாவினர் இந்த சுரங்களப்பாதையை தினசரி பயன்பாட்டிற்காகக் பயன்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது இஸ்ரேல் ராணுவம்.
ஹமாஸின் 4 கீமீ சுரங்கப்பாதை:
மேலும், இந்த சுரங்கப்பாதையில் பல்வேறு ஆயதங்களை ஹமாஸ் அமைப்பினர் பதுக்கி வைத்திருந்ததையும் இஸ்ரேல் ராணுவத்தினர் கண்டறிந்திருக்கின்றனர். இந்த ஆயுதங்களானது எந்த நேரமும் இஸ்ரேலை தாக்குவதற்காகவே அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். காற்றோட்ட வசதி, மின்சார வசதி மற்றும் சிறிய எரிபொருள் வாகனங்களை இயங்குவதற்கான தண்டவாளங்கள் கூட அந்த சுரங்கப்பாதையில் அமைத்திருக்கின்றனர் ஹமாஸ் அமைப்பினர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான யாஹ்யா சின்வாரின் சகோதரரான முகமது சினவாரின் தலைமையிலேயே இந்த சுரங்கப்பாதை கட்டமைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுவரை பாலஸ்தீன் பகுதியில் 800-க்கும் அதிகமான சுரங்கப்பாதைகளை இஸ்ரேல் ராணுவம் கண்டறிந்திருக்கும் நிலையில், அவற்றில் 500-க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகளை இந்த டிசம்பர் மாதம் மட்டும் அழித்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.