'எந்நேரமும் வெடிக்கக் காத்திருக்கும் சீன பொருளாதாரம்' : அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வியாழன் (ஆகஸ்ட் 10) அன்று சீனாவின் தற்போதைய பொருளாதார சவால்கள் காரணமாக, அது எந்நேரமும் வெடிக்கக் காத்திருக்கும் டிக்கிங் டைம் பாம் போல் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பலவீனமான வளர்ச்சியின் காரணமாக சீனா சிக்கலில் இருப்பதாக அமெரிக்காவின் உட்டாவில் நடந்த அரசியல் நிதி சேகரிப்பு நிகழ்வில் பைடன் கூறினார். 1979இல் சீனாவுடன் முறையாக தூதரக உறவுகளை தொடங்கிய அமெரிக்கா, கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவுடன் மோதல் போக்கை தொடர்கிறது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் நடந்த மற்றொரு நிதி சேகரிப்பில், ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று ஜோ பைடன் கூறியிருந்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.
கணினி சிப் தயாரிப்பில் சீனாவுக்கு செக் வைக்கும் அமெரிக்கா
உலகின் கணினி சிப் உற்பத்தியில் முக்கிய மையமாக விளங்கும் தைவானை, தனது நாட்டின் ஒரு பகுதி என உரிமை கொண்டாடி வரும் சீனா, அதை ராணுவ பலத்தை பயன்படுத்தி ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகிறது. இதனால் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வகையில், பல நடவடிக்கைகளை எடுத்து வரும் அமெரிக்கா, கணினி சிப் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்களில் சீனாவில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு, புதன்கிழமை (ஆகஸ்ட் 9) தடை விதித்துள்ளார், பைடன். எனினும், தற்போது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக உள்ள சீனா, இந்த உத்தரவை விமர்சனம் செய்ததோடு, கடுமையாகக் கவலைப்படுவதாக கூறியது. மேலும், இதற்கு பதிலடி நடவடிக்கைகளை எடுக்க தங்களுக்கு உரிமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.