காசா போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்தார் அமெரிக்க அதிபர்
ஹமாஸ் குழு, இஸ்ரேல் பிணையக்கைதிகளை விடுவிக்க ஒப்பு கொண்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடை நிறுத்தப்பட்டது. அந்த இடைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக, நேற்று ஒரு நான்கு வயது அமெரிக்கச் சிறுமி உட்பட மூன்றாவது பிணயக்கைதிகளின் குழுவை ஹமாஸ் விடுவித்தது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஒரு மாதமாக ஹமாஸ் குழுவை அழிப்பதற்காக காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. இந்த தாக்குதலில் இதுவரை 15,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
மூன்று தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 17 பிணயக்கைதிகள் விடுவிப்பு
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தற்காலிகமான போர்நிறுத்ததை இஸ்ரேல் அமல்படுத்தியது. மேலும், இதுவரை ஹமாஸிடம் இருந்து விடுதலை பெற்ற 17 பிணயக் கைதிகள் இஸ்ரேலிய எல்லைக்குத் திரும்பியதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், நேற்று விடுவிக்கப்பட்ட பிணயக் கைதிகளில் ஒரு நான்கு வயது அமெரிக்கச் சிறுமியும் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் ஹமாஸ் தாக்குதலின் போது உயிரிழந்து விட்டதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார். மூன்று தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 17 பிணயக்கைதிகள் போர்நிறுத்த விதிமுறைகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, போர்நிறுத்ததை நீட்டித்து மேலும் பிணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், காசா பகுதியில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் வலியுறுத்தியுள்ளார்.