"சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு
செய்தி முன்னோட்டம்
அரசு ஆதரவு பெற்ற சீன ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' ஜி7 மாநாட்டை "சீன எதிர்ப்புப் பட்டறை" என்று இன்று(மே-22) விமர்சித்துள்ளது.
நேற்று, சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், பிரிட்டன் மற்றும் ஜப்பான் தூதர்களை அழைத்து ஜி7 மாநாட்டிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், 'குளோபல் டைம்ஸ்' செய்தி நிறுவனம் ஜி7 மாநாட்டை கடுமையாக விமர்ச்சித்துள்ளது.
ஜி7 உச்சிமாநாட்டில், "சீனா தொடர்பான பிரச்சனைகள் பற்றி மிகைப்படுத்தப்பட்டதாக" நேற்று கூறிய சீனாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் சன் வெய்டாங், அதற்கு எதிர்ப்புகளை தெரிவிக்க ஜப்பானிய தூதரை அழைத்து பேசினார்.
"மேற்கத்திய நாடுகளில் சீனாவுக்கு எதிரான கருத்தை பரப்ப அமெரிக்கா கடுமையாக முயற்சிக்கிறது" என்றும் "ஜி7 ஆனது சீனாவிற்கு எதிரான பட்டறை" என்றும் 'குளோபல் டைம்ஸ்' கூறியுள்ளது.
DETAILS
சீனாவைத் தனிமைப்படுத்திய ஜி7 பிரகடனங்கள்
ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவில் கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஜி7 உச்சிமாநாடு நடைபெற்றது.
இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் ஜப்பானுக்கு சென்றிருந்தனர்.
இந்த மாநாட்டின் போது, உலக தலைவர்கள், கிழக்கு சீனக் கடல் மற்றும் தென் சீனக் கடலில் அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்தும், திபெத் மற்றும் சின்ஜியாங் உட்பட சீனாவின் மனித உரிமை நிலவரங்கள் குறித்தும் கவலை தெரிவித்தனர்.
தைவான், அணு ஆயுதங்கள், பொருளாதார வற்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விவகாரங்களில் சீனாவைத் தனிமைப்படுத்திய ஜி7 பிரகடனங்கள், பணக்கார நாடுகளுக்கு இடையே நிலவும் பதட்டங்களை அடிக்கோடிட்டுக் காட்டியது.