இந்தியா - வங்கதேசம் உறவில் புதிய திருப்பம்: 'ரீசெட்' செய்ய துடிக்கும் வங்கதேசம்
செய்தி முன்னோட்டம்
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியின் போது இந்தியாவுடன் இருந்த உறவு மிகவும் "அசௌகரியமாக" இருந்ததாக குறிப்பிட்டுள்ள வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஹுமாயூன் கபீர், இந்தியாவுடனான இருதரப்பு உறவை பரஸ்பர நலன்களின் அடிப்படையில் 'ரீசெட்' செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசு, பன்முக அமைப்புகளின் மூலம் அல்லாமல் நேரடியாக இந்தியாவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலமாகவே புதிய ராஜதந்திர உறவை வளர்த்தெடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளது.
கருத்து
'இந்திய மோகத்தில் இருந்து வெளியேற வேண்டும்': ஹுமாயூன் கபீர் கருத்து
வங்கதேசம் இந்தியாவுடன் சமநிலையான ராஜதந்திர அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஹுமாயூன் கபீர், நாட்டின் வெளியுறவுக் கொள்கை ஒரே ஒரு நாட்டின் மீது மட்டும் அதிக கவனம் செலுத்தக்கூடாது என்றார்.
"இந்தியாவின் மீதான அளவுக்கு அதிகமான மோகத்தில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். இந்தியா என்பது மற்றொரு அண்டை நாடு மட்டுமே. அதனுடன் நல்ல இருதரப்பு உறவை மட்டுமே வங்கதேசம் விரும்புகிறது."
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்படாமல், பிம்ஸ்டெக்(BIMSTEC) அமைப்பின் தலைவர் என்ற முறையில் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட பின்னணியில் இக்கருத்து வெளிவந்துள்ளது.
மறுஆய்வு
தூதரக நடவடிக்கைகள் & 101 ஒப்பந்தங்கள் மறுஆய்வு
பிரதமர் தாரிக் ரஹ்மான் செப்டம்பர் 21 முதல் 26 வரை நியூயார்க்கில் நடைபெறவுள்ள 81-வது ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) பங்கேற்கவுள்ளார்.
ஷேக் ஹசீனா காலத்தில் இந்தியாவுடன் கையெழுத்தான சசித்தரங்கள் மற்றும் 101 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை(MoUs) வங்கதேச நாடாளுமன்றக் குழு தீவிரமாக மறுஆய்வு செய்து வருகிறது.
இதனிடையே, ஷேக் ஹசீனாவை திரும்ப ஒப்படைக்குமாறு வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும், இருநாடுகளும் தங்களது வெளியுறவுத் தொடர்புகளை வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் தொடரவே விரும்புவதாக அறிவித்துள்ளன.