பங்களாதேஷில் பள்ளி இசை நிகழ்ச்சி மீது அடிப்படைவாத கும்பல் தாக்குதல்: 20 மாணவர்கள் காயம்
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷின் ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி மீது மத அடிப்படைவாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பிரபல ராக் பாடகர் ஜேம்ஸ் மயிரிழையில் உயிர் தப்பிய நிலையில், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
வன்முறை
வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளி விழாவில் வன்முறை
ஃபரித்பூர் ஜில்லா பள்ளியின் 185வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இரண்டு நாள் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன் இறுதி நிகழ்வாக, பங்காளதேஷின் புகழ்பெற்ற ராக் நட்சத்திரமான ஜேம்ஸின் இசை நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 26) இரவு நடைபெறவிருந்தது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கூடியிருந்த நிலையில், இரவு 9:30 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கவிருந்த நிமிடங்களுக்கு முன், மத அடிப்படைவாத கும்பல் ஒன்று மைதானத்திற்குள் புகுந்து கல்வீச்சுத் தாக்குதலை நடத்தியது.
ரத்து
நிகழ்ச்சி ரத்து மற்றும் காயமடைந்தவர்களின் நிலை
தாக்குதல் நடத்தியவர்கள் மேடையை ஆக்கிரமிக்க முயன்றதோடு, பார்வையாளர்கள் மீது செங்கற்களை வீசினர். இதில் முன் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் பலர் தலை மற்றும் கை கால்களில் பலத்த காயமடைந்தனர். பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இசை நிகழ்ச்சியை ரத்து செய்தது. பாடகர் ஜேம்ஸ் பலத்த பாதுகாப்புடன் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1840 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியின் வரலாற்றுச் சிறப்புமிக்க விழா இத்தகைய கசப்பான சம்பவத்துடன் முடிந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.