LOADING...
ஜப்பானில் பயங்கரம்: தொழிற்சாலையில் புகுந்து 14 பேரை கத்தியால் குத்திய மர்ம நபர்; மர்ம திரவத்தால் பீதி!
ஜப்பானில் தொழிற்சாலையில் புகுந்து மர்ம நபர் 14 பேரை கத்தியால் குத்தினார்

ஜப்பானில் பயங்கரம்: தொழிற்சாலையில் புகுந்து 14 பேரை கத்தியால் குத்திய மர்ம நபர்; மர்ம திரவத்தால் பீதி!

எழுதியவர் Sekar Chinnappan
Dec 26, 2025
04:23 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள மிஷிமா நகரில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று (டிசம்பர் 26) மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலின் போது அடையாளம் தெரியாத திரவம் ஒன்றும் மக்கள் மீது தெளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரம்

தொழிற்சாலையில் நடந்த பயங்கரம்

மிஷிமாவில் உள்ள 'யோகோஹாமா ரப்பர்' (Yokohama Rubber Co.) தொழிற்சாலையில் உள்ளூர் நேரப்படி மாலை 4:30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களைக் கத்தியால் குத்தத் தொடங்கியுள்ளார். தீயணைப்புத் துறை அதிகாரி டோமோஹாரு சுகியாமா கூறுகையில், "தாக்குதல் நடத்திய நபர் 5 அல்லது 6 பேரை நேரடியாகக் கத்தியால் குத்தியுள்ளார். மேலும், அவர் ஸ்ப்ரே போன்ற ஒரு திரவத்தைப் பயன்படுத்தியதால் அங்கிருந்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

கைது

காயமடைந்தவர்களின் நிலை மற்றும் கைது நடவடிக்கை

காயமடைந்த 14 பேரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் குறைந்தது 6 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகத் தெரிகிறது, இருப்பினும் அனைவரும் நினைவுடன் இருப்பதாக ஜப்பானிய ஊடகமான என்எச்கே தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் நபர் அதே தொழிற்சாலையிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் மிகவும் அரிதானவை என்றாலும், சமீபகாலமாக அவ்வப்போது நடைபெறும் இத்தகைய தாக்குதல்கள் அந்நாட்டு மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement