குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர்
இஸ்ரேலில் உள்ள டெல்-அவிவ் விமான நிலையத்தில் குழந்தையை அப்படியே செக்-இன் கவுண்டரில் விட்டு சென்ற பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைக்கு டிக்கெட் வாங்கத் தவறியதால் குழந்தையை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் மட்டும் விமானத்தில் ஏற முயற்சித்தாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பெல்ஜிய பாஸ்போர்ட்டை வைத்திருந்த ஒரு பெற்றோர், டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திற்கு பிரஸ்ஸல்ஸ் என்ற இடத்திற்கு செல்வதற்காக தங்கள் குழந்தையுடன் வந்திருந்தனர். ஆனால், அவர்கள் செக்-இன் கவுண்டர் மூடப்பட்ட பிறகு, டெர்மினல்-1க்கு தாமதமாக வந்து சேர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களிடம் குழந்தைக்கான டிக்கெட் இல்லை. அதை அவர்களால் வாங்க முடியவில்லையா அல்லது அவர்களுக்கு வாங்க விருப்பம் இல்லையா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார் விமான நிலைய அதிகாரி ஒருவர்.
விமானத்தை பிடித்தே ஆகவேண்டும் என்று குழந்தையை கைவிட்டனர்
பின், அவர்கள் விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக குழந்தையை அப்படியே செக்-இன் கவுண்டர் அருகே விட்டுவிட்டு விமானத்தில் ஏறுவதற்கான வரிசைக்கு சென்றிருக்கின்றனர். கைவிடப்பட்ட குழந்தையை கவனித்த விமான நிலைய ஊழியர்கள், குழந்தையின் பெற்றோரைப் பின்தொடர்ந்து சென்று குழந்தையையும் அழைத்து செல்லுமாறு வற்புறுத்தி இருக்கின்றனர். அதன்பின், குழந்தையின் பெற்றோர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனம் சேனல் 12 தெரிவித்துள்ளது. கடைசியில், தம்பதியும் அவர்களது குழந்தையும் விமானத்தில் ஏறவில்லை என்று இஸ்ரேல் டுடே செய்தியில் கூறப்பட்டுள்ளது.