இந்தியாவுக்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதர்: யாரிந்த பிலிப் கிரீன்
இந்தியாவுக்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதராக பிலிப் கிரீன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் இன்று(ஜூன் 16) அறிவித்தார். இதற்கு முன் ஜெர்மனிக்கான ஆஸ்திரேலியாவின் தூதராக இருந்த கிரீன், பேரி ஓ'ஃபாரலுக்கு பிறகு இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதராக பதவியேற்பார். சமீபத்தில் ஜெர்மனிக்கான தூதராக பணியாற்றிய இவர், அதற்கு முன் சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, கென்யா ஆகிய நாடுகளுக்கும் தூதராக இருந்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவுடனான ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை வடிவமைப்பதிலும் வழிகாட்டுவதிலும் முக்கியப் பங்காற்றிய பேரி ஓ'ஃபாரல் என்பவருக்கு அடுத்தபடியாக கிரீன் பதவியேற்பார்.
பெங்களூரின் முதல் ஆஸ்திரேலிய தூதர் ஹிலாரி மெக்கீச்சி
ஓ'ஃபாரலின் பதவி காலத்தின் போது, இரு நாடுகளும் பரஸ்பர தளவாட ஆதரவு ஒப்பந்தத்தில்(MLSA) கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் சொந்தமான தளங்கள் மற்றும் தளவாடங்களை இரு நாட்டு ஆயுதப்படைகளும் பரஸ்பரமாக உபயோகித்து கொள்ள அனுமதிக்கிறது. இவரது பதவிக் காலத்தில் தான் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தமும்(ECTA) கையெழுத்திடப்பட்டது. மேலும், பெங்களூரில் அமைக்கப்பட இருக்கும் புதிய ஆஸ்திரேலிய தூதரகத்திற்கான முதல் தூதரின் பெயரையும் அமைச்சர் பென்னி வோங் அறிவித்துள்ளார். ஹிலாரி மெக்கீச்சி என்பவர் பெங்களூரின் முதல் ஆஸ்திரேலிய தூதராக பதவியேற்க இருக்கிறார். முதன்முதலாக பெங்களூரில் அமைக்கப்பட இருக்கும் ஆஸ்திரேலிய தூதரகம், இந்தியாவின் ஐந்தாவது ஆஸ்திரேலிய தூதரகமாகும். கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த தூதரகத்தின் பொறுப்பிற்கு கீழ் வர உள்ளது.