உலக வெப்பம் அதிகரிப்பு: உலகம் முழுவதும் ஏப்ரல் 2024இல் அதிகபட்ச வெப்பநிலை பதிவு
இன்று வெளியிடப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பின் புதிய அறிக்கையின்படி, இந்த ஏப்ரல் மாதம் காற்று மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட மிக அதிகமாகி சாதனை படைத்துள்ளது. எனவே, உலகம் முழுவதும் ஏப்ரல் 2024இல் அதிகபட்ச வெப்பநிலை பதிவுவாகி உள்ளது. அதிகரித்த வெப்பத்திற்கு பங்களித்த எல் நினோ வானிலை நிகழ்வு தொடர்ந்து வலுவிழந்த போதிலும் அசாதாரணமான வெப்பநிலை அதிகரித்தது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை கூறியுள்ளது. இதற்கு மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2015 பாரிஸ் ஒப்பந்தத்தின் 1.5C இலக்கை விட அதிக வெப்பநிலை பதிவு
கோப்பர்நிக்கஸின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு ஜூன் முதல், ஒவ்வொரு மாதமும் வெப்பம் இதுபோல் அதிகமாக பதிவு செய்யப்பட்டு, முந்தைய மாதத்தின் சாதனையை முறியடித்து வருகிறது. ஏப்ரல் 2024ம் அதற்கு விதிவிலக்கல்ல. 1850-1900 தொழில்துறைக்கு முந்தைய சராசரியை விட தற்போது 1.58 டிகிரி செல்சியஸ் உலக வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 12 மாதங்களில் சராசரி வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.6C அதிகமாக பதிவாகியுள்ளது. இது புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்த கையெழுத்திடப்பட்ட 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின் 1.5C இலக்கை விட அதிகமாகும்.