2026 இலக்கியத்திற்கான நோபல் பரிசு: கனடிய எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இலக்கிய எல்லைகளை கடந்து கவிதை, கட்டுரை மற்றும் பண்டைய கிரேக்க புராணங்களை நவீனக் கதைகளாக வடித்து படைப்புகளை உருவாக்கிய பிரபல கனடிய எழுத்தாளர் ஆன் கார்சன், 2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார். கனடாவின் டொராண்டோ நகரில் 1950 ஆம் ஆண்டு பிறந்த ஆன் கார்சன், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பண்டைய கிரேக்க மொழியைக் கற்று செவ்வியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆய்வாளராகப் பணியாற்றிய இவர், தனது படைப்புகளில் பண்டைய கிரேக்க இலக்கியம் மற்றும் தொன்மக் கதைகளைத் தழுவி புதுமையான முறையில் கவிதைகளாகவும் நாவல்களாகவும் படைத்துள்ளார்.
புகழ்பெற்ற படைப்பு
'ஆட்டோபயோகிராஃபி ஆஃப் ரெட்' நாவலின் மகத்தான வெற்றி
ஆன் கார்சனின் புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றான 'ஆட்டோபயோகிராஃபி ஆஃப் ரெட்' என்ற கவிதை வடிவிலான நாவல், சிகப்பு நிற இறக்கைகள் கொண்ட கெரியன் எனும் அரக்கனை ஹெராக்ளீஸ் வதம் செய்யும் பண்டைய கிரேக்க புராணத்தை அடிப்படையாகக் கொண்டது.
அந்த புராணக் கதையை தற்கால சூழலுக்கு ஏற்ப மாற்றி, கெரியன் எனும் வளரிளம் பருவச் சிறுவனுக்கும் ஹெராக்ளீஸுக்கும் இடையிலான காதலை அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தார்.
சப்போவின் பாடல்கள் மற்றும் எலெக்ட்ரா ஆகிய செவ்வியல் படைப்புகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
கவிதைக்கு மட்டுமின்றி, இலக்கிய வகைகளுக்கு இடையிலான எல்லைகளைத் தகர்த்து புதிய வடிவம் கொடுத்த இவரது பல தசாப்த கால பங்களிப்பைப் போற்றும் வகையில் இந்த உயரிய நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.