அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் அமெரிக்க-இந்தியர்: யாரிந்த விவேக் ராமசாமி
இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப தொழிலதிபர் விவேக் ராமசுவாமி, நிக்கி ஹேலிக்குப் பிறகு குடியரசுக் கட்சியின் அதிபர் தேர்தலில் நுழையும் இரண்டாவது சமூக உறுப்பினராவார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசுவாமி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறை தொழிலதிபர் ஆவார். இவர் ஃபாக்ஸ் நியூஸின் மூலம், தான் அமெரிக்க அதிபர் தேர்தல்-2024இல் நிற்கபோவதாக அறிவித்துள்ளார். "இந்த நாட்டின் இலட்சியங்களை புதுப்பிக்க அதிபர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன் என்று இன்றிரவு சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்," என்று விவேக் ராமசாமி கூறியுள்ளார். "இது வெறும் அரசியல் பிரச்சாரம் அல்ல; அடுத்த தலைமுறை அமெரிக்கர்களுக்கு ஒரு புதிய கனவை உருவாக்கும் கலாச்சார இயக்கம் இது" என்று அவர் கூறினார்.
யாரிந்த விவேக் ராமசுவாமி?
விவேக் ராமசுவாமியின் பெற்றோர் கேரளாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர். "நான் 90களில் ஒஹாயோ மாகாணத்தில் மெலிதான கண்ணாடி மற்றும் வேடிக்கையான கடைசி பெயருடன் ஒல்லியான குழந்தையாக வளர்ந்தேன். 'நீ தனித்து நிற்கப் போகிறாய் என்றால் சிறந்து விளங்குவதனால் தனித்து நில்' என்று சொல்லி என் பெற்றோர் என்னை வளர்த்தனர். சாதனை என்பது நான் முன்னேறுவதற்கான டிக்கெட்டாக இருந்தது. நான் பல பில்லியன் டாலர் நிறுவனங்களை நிறுவினேன். பின், திருமணம் செய்து கொண்டு ஒரு குடும்பத்தை வளர்த்து, கடவுள் மீது இருக்கும் என் நம்பிக்கையையும் பின்பற்றினேன்" என்று விவேக் ராமசுவாமி கூறியுள்ளார். தகுதி-அடிப்படையிலான குடியேற்றத்திற்கு தான் வலுவான ஆதரவாளர் என்றும், நாட்டிற்குள் நுழையும்போது சட்டத்தை மீறுபவர்களுக்கு மன்னிப்பு வழங்கப் போவதில்லை என்றும் விவேக்-ராமசாமி கூறியுள்ளார்.