இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உறுதி: ரணில் விக்கிரமசிங்கே
இலங்கை தமிழர்களுக்கு நிச்சயம் அதிகார பகிர்வு வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசாங்கம் 13வது திருத்தத்தை "முழுமையாக அமுல்படுத்தும்" என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை(ஜன:15) தெரிவித்தார். இதே போன்ற விஷயங்களுக்கு ஏற்கனவே வாக்குறுதிகள் வழங்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2015ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கே தி ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதே போன்ற வாக்குறுதியை வழங்கி இருக்கிறார். "அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம் என நம்புகிறோம். வடக்கில் மட்டுமல்ல, தெற்கிலும், முதலமைச்சர்கள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோருகிறார்கள்,"என்று விக்கிரமசிங்கே, இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வில் நேற்று முன்தினம் பேசினார்.
13வது சட்ட திருத்தம் என்றால் என்ன?
1987இல் இந்தியாவின் தலையீட்டைத் தொடர்ந்து, இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இலங்கை அரசியலமைப்பில் 13வது திருத்தம் சேர்க்கப்பட்டது. அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் இலங்கையின் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனே ஆகியோர் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம், தனிநாடுக்காகப் போராடிக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே வளர்ந்த இனக்கலவரத்தைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. நாட்டில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இது சிங்கள பெரும்பான்மை பகுதிகள் உட்பட நாட்டை 9-மாகாணங்களாகப் பிரித்து அந்த மாகாணங்களுக்கு சுயமாக ஆட்சி செய்யும் திறனை வழங்குகிறது. ஆனால், பெரும்பாலான சிங்கள கட்சிகள் அதிகாரங்களைப் பகிர்வதை கடுமையாக எதிர்க்கின்றன.