LOADING...
தலிபான் அரசு அதிகாரிகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த முழுத் தடை, மீறினால் சுக்குநூறாக உடைக்கப்படும்
இந்த விசித்திரமான உத்தரவு சர்வதேச வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

தலிபான் அரசு அதிகாரிகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த முழுத் தடை, மீறினால் சுக்குநூறாக உடைக்கப்படும்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 18, 2026
04:56 pm

செய்தி முன்னோட்டம்

ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தி வரும் தலிபான்கள், தங்கள் நாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு அதிரடியாக ஒட்டுமொத்த தடை விதித்துள்ளனர். இந்த விசித்திரமான உத்தரவு அந்நாட்டு அரசியல் மற்றும் சர்வதேச வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்களின் ராணுவ நீதிமன்றங்கள் மூலம் பிறப்பிக்கப்பட்டு, சர்வதேச ஊடகமான தி கார்டியன் மூலம் ஆய்வு செய்யப்பட்ட இந்த புதிய விதியின்படி, "உயர் பதவியில் இருப்பவர்கள், அடிமட்ட ஊழியர்கள், முஜாஹிதீன் போராளிகள் அல்லது சேவைப் பணியாளர்கள்" என எவராக இருந்தாலும் சரி, அலுவலகத்தில் மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனை

"போனை உடைப்போம்... ஷரியா சட்டப்படி தண்டிப்போம்!"

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், தலிபான் அதிகாரி ஒருவர் இந்த தடை உத்தரவை வாசித்துக் காட்ட, மற்றொரு நபர் அங்கிருக்கும் மொபைல் போன்களை சுத்தியலால் அடித்து உடைக்கும் காட்சிகள் பரவி வருகின்றன. "யாராவது இந்த விதியை மீறி ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால், அவர்களின் மொபைல் போன் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு சபையிலேயே சுக்குநூறாக உடைக்கப்படும். மேலும், விதியை மீறியவருக்கு ஷரியா சட்டத்தின்படி கடுமையான சட்டப்பூர்வத் தண்டனைகளும் வழங்கப்படும்." என அறிக்கை கூறுகிறது. இந்தத் தடையில் இருந்து யாருக்காவது விலக்கு அளிக்கப்பட வேண்டும் எனில், அதற்குத் தலிபான்களின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதாவிடம் இருந்து எழுத்துப்பூர்வமான சிறப்பு ஆணை பெற்றிருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பின்னணி

ஸ்மார்ட்போன் தடைக்கு பின்னணியில் இருக்கும் காரணங்கள்

தலிபான் அரசு அதிகாரிகள் தங்களின் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி அமைச்சகத்தின் ரகசியக் கோப்புகள், அரசு ஆவணங்கள் மற்றும் முக்கிய கூட்டங்களை போட்டோ மற்றும் பதிவு செய்து விடுகின்றனர். இந்த விபரங்கள் தலிபான் உச்ச தலைவர் ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாகவே பொதுவெளியில் கசிந்து விடுகிறது. இதனைத் தடுக்கவே இந்த நடவடிக்கை. அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் எப்போதும் தங்களின் மொபைல் போன்களிலேயே மூழ்கியிருப்பதால், அவர்களின் வேலைத் திறன் மற்றும் உற்பத்தித் திறன் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகத் தலிபான்கள் கருதுகின்றனர். இந்த ஸ்மார்ட்போன் தடை, முதற்கட்டமாக அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே எனக் கூறப்பட்டாலும், ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களில் பெண்கள், பள்ளி ஆசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கும் இந்தத் தடை மறைமுகமாக நீட்டிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Advertisement