ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்திற்குப் பிறகு அதே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு ஆப்கானிஸ்தான் மாகாணத்தில் இன்று காலை மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், கடந்த வாரம் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதியில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அளித்த தகவலின் படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி மாகாணத்தின் தலைநகரான ஹெராத்துக்கு 34 கிலோமீட்டர் வெளியிலும், பூமிக்கு 5 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு குறித்து உடனடியாக எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
கடந்த வார நிலநடுக்கத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்
மேற்கு ஆப்கானிஸ்தான் மாகாணத்தின் ஹெராத் நகரில் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் 90% மேற்பட்டோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என ஐநா வெளியிட்டு இருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் மேற்பட்ட நிலநடுக்கத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள், கிராம அலுவலக கட்டிடங்களும் பாதிப்படைந்தது. இந்த நிலநடுக்கம், ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.