கின்னஸ் சாதனை: கண்ணை மூடிக்கொண்டு பந்தை அடித்து விளையாடிய சிறுவன்
கண்ண மூடிக்கொண்டு பந்தை அடித்த சிறுவன் கின்னஸ் சாதனை செய்துள்ளார். கூடைப்பந்தைத் தரையில் அடித்து விளையாடுவது மிக சுலபமானதாக தெரிந்தாலும், விளையாடுவதற்கு கண்களும் கைகளும் தொடர்ந்து ஒருங்கிணைந்த செயல்பாட்டை கொடுக்க வேண்டும். அப்படி இருக்கையில், கண்களை மூடிக்கொண்டு ஒரு மணிநேரத்திற்கு கூடைப்பந்தை தரையில் தட்டி விளையாடுவது மிகவும் கடினமானதாகும். ஹென்றி ஸ்பீட்வெல் என்ற 9 வயது தொடக்கப் பள்ளி மாணவர் தன் கண்களை கட்டிக்கொண்டு ஒரு மணிநேரம் கூடை பந்தை தரையில் அடித்து விளையாடி சாதனையை முறியடித்திருக்கிறார். கிறிஸ்டியன் ராபர்டோ லோபஸ் ரோட்ர்கஸ் என்பவர் பிப்ரவரி 13, 2021 அன்று 67 நிமிடங்கள் இதை தொடர்ந்து செய்து சாதனை படைத்திருந்தார். அதை தற்போது ஹென்றி ஸ்பீட்வெல் என்ற மாணவர் முறியடித்திருக்கிறார்.
புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நிதி திரட்டல்
ஸ்பீட்வெல் செவ்வாயன்று(பிப் 7) மவுண்ட் கிரீன்வுட் எலிமெண்டரி பள்ளி ஜிம்னாசியத்தில் தனது பயிற்றுனர்கள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வகுப்பு தோழர்களின் முன்னிலையில் இந்த சாதனையை செய்தார். மேலும், இதே நிகழ்வின் போது அவர் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக 2,800 டாலர்களையும்(சுமார் ரூ.2.31 லட்சம்) திரட்டினார். இதனால், அவரது இந்த பெர்பாமன்ஸ் இன்னும் வியக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது. சென்ற வருடம் புற்றுநோயால் இறந்த தனது தாத்தா ஜேம்ஸ் "ஜே" கன்னாவின் நியாபகார்த்தமாக இதை அவர் செய்ததாக கூறப்படுகிறது. ஹென்றி ஸ்பீட்வெல் தொடர்ந்து 80 நிமிடங்களுக்கு கண்களை கட்டிக்கொண்டு கூடைப்பந்தை தரையில் அடித்து விளையாடியதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த உலக சாராதனையை விட 13 நிமிடங்கள் அதிகமாகும்.