துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவு
47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்ற துருக்கி நிலநடுக்கம் ஏற்பட்ட 2 வாரங்களில் மீண்டும் ஒரு பெரும் நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை பகுதியில் ஏற்பட்டிருக்கிறது. 6.4 ரிக்டர் அளவில், தெற்கு துருக்கிய நகரமான அன்டாக்யாவுக்கு அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், சிரியா, எகிப்து மற்றும் லெபனானிலும் உணரப்பட்டது. இது 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் தாக்கியதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய சிலர் பற்றிய தகவல் தனக்கு கிடைத்ததாக ஹெடேய் மேயர் லுட்ஃபு சவாஸ் ஹேபர்டர்க் தெரிவித்திருக்கிறார்.
பதிக்கப்பட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள்
இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்றும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு கூறியுள்ளார். துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 11 மாகாணங்களில் கிட்டத்தட்ட 200,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்தார். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கான நிவாரண உதவிகள் $185 மில்லியனை எட்டியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பூகம்பங்களில் இருந்து தப்பியவர்களில் சுமார் 356,000 கர்ப்பிணிப் பெண்கள் இருக்கின்றனர் என்றும் அவர்கள் சீக்கிரமாக சுகாதார சேவைகளை அணுக வேண்டும் என்றும் ஐ.நா. பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.