ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபருக்கு பதிலாக கலந்து கொள்ள இருக்கும் லீ கியாங்: யார் இவர்?
புது டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங்க்கு பதிலாக சீனாவின் பிரீமியர் லீ கியாங் கலந்து கொள்வார் என்று சீனா இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து, சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜி20 மாநாட்டை ஜி ஜின்பிங் தவிர்ப்பது இதுவே முதல் முறையாகும். செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் புது டெல்லியில் வைத்து நடைபெறவுள்ள உச்சிமாநாட்டைத் தவிர்த்துள்ள இரண்டாவது ஜி20 தலைவர் ஜி ஜின்பிங் ஆவார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை. அவருக்கு பதிலாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்.
சீனாவின் பிரீமியர் லீ கியாங்: யார் இவர்?
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சீனாவின் ரப்பர் ஸ்டாம்ப் பாராளுமன்றத்தின் வருடாந்திர கூட்டத்தின் போது, சீனாவின் பிரீமியராக லீ கியாங்கை நியமிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் பரிந்துரைத்தார். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவை நிர்வகிப்பதில் அந்நாட்டு பிரீமியருக்கும் பெரும் பங்கு உண்டு. தனது வாழ்நாள் முழுவதும் பொது சேவையில் இருந்த லீ கியாங், மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு நியமிக்கப்பட்ட முதல் பிரீமியர் ஆவார். பிரீமியராக பதிவு ஏற்பதற்கு முன்பு வரை, லீ கியாங் எந்தவொரு மத்திய அரசு பதவியிலும் பணியாற்றியதில்லை. 64 வயதான லீ கியாங், ஷாங்காயின் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஆவார். மேலும், அவர் அதிபர் ஜின்பிங்கின் நெருங்கிய கூட்டாளி என்றும் செய்திகள் கூறுகின்றன.