இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் 42 பாலத்தீனர்கள் பலி: போரை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் மக்கள் போராட்டம்
சனிக்கிழமையன்று காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் அரசாங்க ஊடக அலுவலகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனப் பகுதியில் பலத்த உயிரிழப்புகள் மற்றும் மோசமான மனிதாபிமான நிலைமைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தெற்கு நகரமான ரஃபாவிற்கு அருகில் உள்ள கூடார முகாம் மீது வெள்ளிக்கிழமை மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர். இதற்கிடையில், இஸ்ரேலிய தலைநகரான டெல் அவிவ்வில் கூடிய ஏராளமான மக்கள், போரை நிறுத்த கோரியும், பிணையக்கைதிகளை திரும்பப்பெற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை விமர்சிக்கும் மக்கள்
மேலும், டெல் அவிவ்வில் போராடிய இஸ்ரேலிய மக்கள், தங்களது பிரதமரை மாற்ற புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் போரை தற்போதைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கையாண்டது தங்களுக்கு பிடிக்கவில்லை என்று பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் காசா நகரில் உள்ள இரண்டு ஹமாஸ் இராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டன என்று கூறப்படுகிறது. அல்-ஷாதி அகதிகள் முகாமில் நடந்த நேற்றைய ஒரு தாக்குதல் 24 உயிர்களைக் கொன்றது. டூபாஹ் சுற்றுப்புறத்தில் நடந்த மற்றொரு தாக்குதல் 18 பேரை கொன்றது. ஹமாஸின் இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் போது தெரியாமல் மக்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.