3 வயசுல புத்தகமா! கின்னஸ் சாதனை படைத்த இந்திய வம்சாவளி சிறுவன்; குவியும் பாராட்டுகள்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் வாழும் 3 வயது இந்திய வம்சாவளி சிறுவன் அத்வை ஜெயின், புத்தகம் வெளியிட்டு உலகின் மிக இளம் வயது ஆண் எழுத்தாளர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். தனது முன்பள்ளிப் பருவத்தின் (Preschool) எளிய மதிய உணவு நேர அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு முழுமையான புத்தகத்தை உருவாக்கி இந்த வரலாற்று சாதனையை இச்சிறுவன் நிகழ்த்தியுள்ளார். கின்னஸ் அமைப்பால் ஏப்ரல் 2026-இல் இச்சாதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
உணவு
உணவை வீணாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் புத்தகம்
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள மான்மவுத் ஜங்ஷன் பகுதியில் ஏப்ரல் 23, 2022 அன்று பிறந்த அத்வை ஜெயின், "டினோ லேர்ன்ஸ் நாட் டு வேஸ்ட் ஃபுட்" (Dino Learns Not to Waste Food) என்ற தலைப்பில் இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.
முன்பள்ளியில் உணவு சாப்பிடும் போது தான் கற்றுக் கொண்ட விஷயங்களைக் கதையாக மாற்றி, உணவின் மதிப்பை உணர்த்தும் வகையிலும், உணவை வீணாக்குவதைத் தவிர்க்கும் முக்கியத்துவத்தையும் இளம் வாசகர்களுக்கு புரிய வைக்கும் வகையில் இந்த புத்தகத்தைப் படைத்துள்ளார்.
தூதர் பாராட்டு
நியூயார்க் இந்தியத் துணைத் தூதர் நேரில் பாராட்டு
இச்சிறுவனின் அபார சாதனையைப் பாராட்டி, நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதர் பினாயா ஸ்ரீகாந்த பிரதான் அத்வை ஜெயினை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்தியத் துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், "தனது படைப்பாற்றலால் உணவை வீணாக்கக் கூடாது என்ற உயரிய கருத்தைப் பரப்பும் 4 வயது சிறுவன் அத்வை ஜெயினுக்கு நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
படைப்பாற்றலுக்கு வயது ஒரு தடையில்லை என்பதை இச்சிறுவன் நிருபித்துள்ளார்.
படைப்பாற்றல்
சகோதரியுடன் இணைந்து தொடரும் படைப்பாற்றல் பயணம்
அத்வை ஜெயினுடன் சேர்த்து அவனது 12 வயது சகோதரியான அவ்வியா ஜெயினுக்கும் இந்தியத் தூதரகம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
அவனது சகோதரியும் ஒரு எழுத்தாளர் மற்றும் ஓவியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு சிறு குழந்தைகளும் தங்களது படைப்பாற்றல் மற்றும் கதைகள் மூலம் இளம் தலைமுறைக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றனர்.
3 வயதிலேயே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள அத்வை ஜெயினுக்கு உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.