பிரேசிலின் அமேசான் பகுதியில் விமான விபத்து: 14 பேர் பலி
பிரேசிலின் வடக்கு அமேசான் மாநிலத்தில் சனிக்கிழமையன்று நடந்த விமான விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கிமீ (248 மைல்) தொலைவில் உள்ள பார்சிலோஸ் மாகாணத்தில் நடந்துள்ளது. "சனிக்கிழமை பார்சிலோஸில் நடந்த விமான விபத்தில் பலியான 12 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்களுக்கு நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். தேவையான ஆதரவை வழங்குவதற்கு எங்கள் குழுக்கள் ஆரம்பத்தில் இருந்தே செயல்பட்டு வருகின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபமும் பிரார்த்தனையும் உரித்தாகுக." என்று அமேசானாஸ் மாநிலத்தின் ஆளுநர் வில்சன் லிமா ட்விட்டரில் கூறியுள்ளார்.
கனமழையால் விபத்துக்குள்ளான விமானம்
பிரபல சுற்றுலா நகரமான பார்சிலோஸில் புயலுக்கு மத்தியில் அந்த விமானம் தரையிறங்க முயன்றதால் அது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. பார்சிலோஸில் அந்த விமானம் தரையிறங்க முயன்ற போது, அங்கு கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் கண்ணுக்கு முன்பு என்ன நடக்கிறது என்பதை விமானியால் பார்க்க முடியவில்லை. இதனையடுத்து, அவர் குத்துமதிப்பாக தரையிறங்க முயற்சித்த போது அந்த விமான விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கும் பகுதியிலிருந்து வெளியேறி விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் கொல்லப்பட்டனர். பயணிகள் அனைவரும் பிரேசிலியர்கள் என்றும் அவர்கள் மீன்பிடிப்பதற்காக அப்பகுதிக்கு பயணித்தனர் என்றும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.