'அவர் முன்பு மட்டும் கப்சிப் ஆகிவிடுவேன்' : தோனியுடனான நட்பு குறித்து பேசிய யுஸ்வேந்திர சாஹல்
இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே கேப்டன் எம்எஸ் தோனி, ரசிகர்களால் மட்டுமல்லாது மற்ற கிரிக்கெட் வீரர்களாலும் போற்றப்படுகிறார். அந்த வகையில், இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், ரன்வீர் அல்லபாடியாவுக்கு அளித்த பேட்டியில் எம்எஸ் தோனி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான யுஸ்வேந்திர சாஹல், மைதானத்திலும் களத்திற்கு வெளியேயும் தனது குறும்பு செயல்களுக்காக பெயர் பெற்றவர். எனினும், சமீபத்திய நேர்காணலில், தான் என்னவிதமான மனநிலையில் இருந்தாலும், தோனி அங்கு இருந்தால் அமைதியாகி விடுவேன் என்றும், அவர் ஏதாவது கேட்டால் மட்டுமே பதிலளிப்பேன் என்றும் கூறினார்.
செஞ்சூரியன் போட்டியில் தோனி வழங்கிய ஆதரவை நினைவு கூறிந்த யுஸ்வேந்திர சாஹல்
செஞ்சூரியனில் நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 64 ரன்களை விட்டுக்கொடுத்த சம்பவத்தையும் சாஹல் பகிர்ந்து கொண்டார். சாஹல், "நாங்கள் செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தோம். முதல் முறையாக நான் நான்கு ஓவர்களில் 64 ரன்கள் எடுத்தேன். ஹென்ரிச் கிளாசென் எனது பந்துவீச்சை பதம்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கேப்டன் தோனி, இன்று உங்கள் நாள் அல்ல, பரவாயில்லை விடுங்கள் என்று சொன்னார்." என்று மேலும் கூறினார். சாஹல் 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டி20யில் 75 போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டைத் தவிர, அவர் 145 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.